Pages

Friday, December 17, 2010

2-ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ.யை தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டிய பொறுப்பை சுப்ரீம் கோர்ட் தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளது..!

நீதியை பரிபாலனம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் உச்சநீதிமன்றம், இப்போது நீதி நிர்வாகத்தையே மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது நமது நாட்டைப் பிடித்த சோகம்தான்...!



"2-ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, சி.பி.ஐ.யும் அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். எந்த உயர் பதவியில் இருக்கும் தனி நபர் மற்றும் ஏஜென்சிகளின் நிர்பந்தங்களுக்கும் கட்டுப்படாமல், விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கடந்த 2001 முதல் 2008-ம் ஆண்டுவரை நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். அதாவது, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட தொலைத் தொடர்பு கொள்கை பற்றி விசாரிக்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு எந்த அளவுக்கு இழப்பு ஏற்பட்டது  என்பதற்கு, விசாரணையின்போது அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

இந்த விசாரணையின் நிலை அறிக்கையை, சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும், 2011, பிப்ரவரி 10-ம் தேதி, சீலிட்ட கவரில் வைத்து சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட் கண்காணிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்து விட்டதால், இந்த மோசடி பற்றி விசாரிக்க சிறப்புக் குழு எதையும் அமைக்க வேண்டிய தேவையில்லை.

ஏனெனில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் விரிவான விசாரணை மேற்கொள்வர் என, சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியமும், சி.பி.ஐ., சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் வேணுகோபாலும் உறுதி அளித்துள்ளதால், சிறப்புக் குழுவுக்கு அவசியம் இல்லை.

தகுதியில்லாத நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஆடிட்டர் ஜெனரல் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதில், உண்மையிருப்பதாக தெரிகிறது' எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

2-ஜி ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் அளித்த கடன் குறித்த விவரங்கள் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். இந்த ஊழலில் வங்கிகளுக்குப் பங்கு உள்ளதா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.

- உரிம ஒப்பந்தத்தில், எந்தெந்த தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

- உரிமம் பெற தகுதியற்ற நிறுவனங்கள் மீது டிராய் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கண்டறிய வேண்டும்.

- 2 ஜி உரிமம் வழங்கியதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று மனுதாரரான மூ்த்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களில் இந்த பெஞ்ச் திருப்தி அடைகிறது. குற்றம் நடந்ததற்கான பூர்வாங்கம் இருப்பதாகவும் உணர்கிறது.

- 2-ஜி ஏலம் தொடர்பான வழக்கு விசாரணையில் சிபிஐ பின் வாங்கியது, பதுங்கியது, தாமதம் செய்தது என்ற பூஷனின் குற்றச்சாட்டையும் இந்த கோர்ட் ஏற்கிறது.

- இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு விட வேண்டும் என்று கோரி மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்காமல் டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது, தவறாகும் என்று இந்த கோர்ட் கருதுகிறது.

- தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையரின் அறிக்கை மற்றும் பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஏலம் முற்றிலும முறைகேடாக நடந்திருப்பதையும் இந்த கோர்ட் உறுதிப்படுத்துகிறது.

- சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்தவுள்ள விசாரணையின்போது இந்த 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு நடைமுறையால் நாட்டுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது என்பதையும் தெளிவாக கண்டுபிடிக்க வேண்டும்.

- நீரா ராடியா பேசிய பேச்சுக்கள் அடங்கிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் அனைத்தையும் வருமான வரித்துறை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்.

இப்படி அடுக்கடுக்கான உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இதில் இருந்து தெரிவது என்னவென்றால் ஒரு வழக்கு விசாரணையை எந்தத் திசையில் நகர்த்துவது, நடத்துவது என்றுகூட செய்யத் தெரியாமல் தேங்கி நிற்கும் அரசுதான் இன்றைக்கு நம்மை ஆண்டு வருகிறது என்பதுதான்..!

உச்சநீதிமன்றத்தின் விளாசலைப் பொறுக்க மாட்டாமல்தான் லண்டனில் பதுங்கியிருந்த நீரா ராடியாவை அவசரமாக வரவழைத்து நேரில் விசாரித்தார்கள்.

நாடு முழுவதும் அதிரடி ரெய்டு நடத்தினார்கள். ராசா மற்றும் அவரது கொள்ளைக் கூட்டத்தினரை மிரட்டுவதாக நமக்கு பாவ்லா காட்டி சோதனை நடத்தினார்கள். இப்படி முதல்வர் வீட்டு ஆடிட்டர்வரையில் தங்களது கைவரிசையைக் காட்டி ஷோ காட்டியிருக்கிறது சி.பி.ஐ.

ஆனால் என்ன எடுத்தார்கள்..? எதைக் கண்டுபிடித்தார்கள் என்பதை அவர்கள் இனி சொன்னாலும் ஒன்றுதான்.. சொல்லாமல் விட்டாலும் ஒன்றுதான்..!

இத்தனை பெரிய நீதித்துறை கட்டமைப்பையே ஏமாற்றத் துணிந்த கொள்ளைக் கூட்டம், இவ்வளவு காலமா ஆதாரங்களை  விட்டு வைத்திருக்கப் போகிறார்கள்..?



சரி.. சுப்ரீம் கோர்ட்டின் நேரடி டைரக்ஷனில் சிபிஐ இயங்கக் கூடிய நிலைமைக்குப் போய்விட்டதே என்று நமது பிரதமர் என்று சொல்லப்படும் மன்னமோகனசிங் கொஞ்சமாவது கவலைப்படுவார் என்று நினைத்தீர்களா..? நிச்சயமாக இருக்காது..

மானம், அவமானம் பற்றியெல்லாம் இனிமேலும் அவர் யோசித்துக் கொண்டிருந்தால் பிரதமர் பதவியில் அவர் நீடித்திருக்க முடியாது..  அதிகாரத்தைப் பிடுங்கி வைத்துக் கொண்டு, நீ எதற்கும் லாயக்கில்லை. வீட்ல சும்மா இரு என்று நீதிமன்றமே சொல்கின்றவரையில்தான் இவரது வேலை பார்க்கும் லட்சணம் இருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவருக்கு நரசிம்மராவே பரவாயி்ல்லை போலிருக்கிறது..!


இவ்வளவுக்குப் பிறகும் இவர் பிரதமர் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது அரசியல்வியாதிகளுக்கு உரித்தான குணம்தான்..! இப்போதெல்லாம் கோர்ட், கேஸ், புகார்கள் இவையெல்லாம் தினம்தினம் அரசியல்வியாதிகள் சந்திக்கின்ற விஷயங்களாகப் போய்விட்டதால் இதெல்லாம் இவர்களுக்கு மரத்துப் போயிருக்கும்..

இவர்தான் இப்படியென்றால் நமது கல்லுளிமங்கன், தமிழினத் தலைவன், ஊழல் தாத்தா கலைஞர் கருணாநிதி மன்னமோகனசிங்கையும் மிஞ்சிவிட்டார்.

போயஸ் ஆத்தா விடும் அறிக்கைக்கு உடனுக்குடன் பதில் அளித்து நோஸ் கட் அளிக்கும் பணியைச் செவ்வனே செய்து வரும் இவரும், இவரது குடும்ப உறுப்பினர்களும் நீரா ராடியா டேப்புகள் பற்றி மட்டும் இன்றுவரையிலும் வாய் திறக்காதது ஏன்..?

ஜெயலலிதாவின் ஒவ்வொரு அறிக்கையையும் கண் கொத்திப் பாம்பாக பார்த்து வந்து முதல் நாள் அறிக்கையின் முதல் பத்தி, இரண்டாவது நாள் அறிக்கையின் இரண்டாம் பத்தியாக வந்திருக்கிறதே என்று கேட்கின்ற அளவுக்கு புத்திக் கூர்மையுள்ள இந்த மனிதர் தனது மகளும், மனைவியும் ஒரு அரசியல் புரோக்கருடன் தனது கட்சியை விலை பேசும் உண்மை வெளிவந்து இத்தனை நாட்களாகியும் கள்ள மெளனம் சாதித்து வருகிறாரே இது ஏனாம்..?

நேற்றைய ரெய்டுகளுக்குப் பிறகு இவரது துணைவியார் வாய் திறந்து ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். வோல்டாஸ் நிறுவனம் மற்றும் டாடா நிறுவனத்திற்குமான பிரச்சினையில் தனக்குச் சம்பந்தமில்லையென்று சொல்லியிருக்கிறார்.

வோல்டாஸ் நிறுவனம் அமைந்திருக்கும் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்தின் பவர் ஆஃப் அட்டர்னி தன்னுடைய ராயல் பர்னிச்சர் கடையில் பர்னிச்சர்களைத் துடைக்கும் வேலை செய்து கொண்டிருந்த சரவணன் என்பவருக்குக் கிடைத்தது. அவருக்குத்தான் இதில் தொடர்பு என்று கூறியிருக்கிறார்.

இப்படி கடையில் தூசி தட்டியவருக்கு இத்தனை கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்கும் அதிகாரத்தைக் கொடுப்பதற்கு டாடா நிறுவனத்தினர் என்ன முட்டாள்களா என்று நாம் திருப்பிக் கேட்கக் கூடாது.. ஏனெனில் இப்படி அறிக்கைவிட்டவர் தமிழினத்தின் தலைவரான கலைஞர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தியம்மாள். அவர் ஒன்று சொன்னால் ஒன்பது சொன்னதற்குச் சமம். கையது வாயது பொத்தி அமைதியாக இருங்கள் என்கிறார்கள்.

இவருடைய திருமகள் கனிமொழியும் நேற்றுதான் வாய் திறந்திருக்கிறார். இதுநாள்வரையிலும் தனது குடும்ப பிரச்சினைகளெல்லாம் வீதிதோறும், ஊர்தோறும், சேனல்கள்தோறும், பத்திரிகைகள்தோறும் நாறிய பின்பும் கண்டுகொள்ளாமல் பணம், அதிகாரம் இரண்டை மட்டுமே லட்சியமாகக் கொண்டு சிரிப்போடு வலம் வரும் இந்த அம்மணி தனக்கும், இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்று அறிக்கை விட்டிருக்கிறார்.

ஆனால் நீரா ராடியாவுடனான பேச்சுக்கள் பற்றி கலைஞர், அவருடைய துணைவியார், மகள், மகன்களான மத்திய அமைச்சர்கள், டேப் பேச்சில் படிபட்ட அமைச்சர்கள், அடிப்பொடிகளான உடன்பிறப்புக்கள் என்று அனைவரும் பதில் சொல்லாமல் இருப்பதில் இருந்தே அவைகள் அனைத்தும் உண்மை என்பது தெளிவாகிறது..!

நேற்று அமைச்சர் பூங்கோதையிடம் இது பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டதற்கும் அவர் பதில் சொல்லாமல் சென்றிருக்கிறார்.

நித்தியானந்தா ஜெயில் செல்லில் படுத்திருந்த விஷயத்தையே நான்கு தலைப்புகளில் வெளியிட்டு பிரத்யேகச் செய்தி என்று கொண்டாடிய நக்கீரன் தனது இணை ஆசிரியர் வீட்டில் நடந்த ரெய்டையும், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற கதையையும் சுத்தமாக மறைத்துவிட்டது. ஒரு சிறிய செய்திகூட அது பற்றி வெளியிடவில்லை.

இப்படியொரு இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகையாளராக நக்கீரன் கோபால் இத்தனையாண்டு காலத்திற்குப் பிறகு உருவெடுத்திருப்பதற்கு அவருக்கு நமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வோம்..!

ஆக மொத்தம், பொதுச் சொத்தைத் திருடிய கூட்டம் இன்றைக்கு தேள் கொட்டிய திருடனைப் போல் திருதிருவென முழிக்கிறது.

இந்தக் கள்ள நாடகத்தில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகர்கள் இவர்கள்தான் என்பதால் இந்த நடிப்பு இவர்களுக்குக் கை வந்த கலை. திரை விழுகும்வரையில் நடிப்பைக் கொட்டிவிட்டுத்தான் போவார்கள்..!

அடுத்த முறை இவர்களை நாடக மேடையில் ஏற விடாமல் தடுக்கும் பணியை மட்டும் நாம் செய்தால், அது நமக்கும் நல்லது.. நமது வாரிசுகளுக்கும் நல்லது..!

Monday, December 6, 2010

எங்கும் எதிலும் ஒரே லஞ்சமயம்; சாலை சீரமைப்பு ஒப்பந்தம் பெறவும் லஞ்சம்; பணம் பெறவும் லஞ்சம்

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மாநிலம் முழுவதும் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் தரம் குறைவாக போடப்பட்ட சாலைகள், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சாலைகள் பாதிப்பால், பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் முக்கியப் பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலைகளை, மாநில நெடுஞ்சாலைத்துறை அமைத்து, பராமரித்து வருகிறது. இது தவிர, மாநகராட்சி நிர்வாகம் தங்களுக்கு உட்பட்ட சாலைகளையும், நகராட்சி நிர்வாகம் தங்களுக்கு உட்பட்ட சாலைகளையும், ஒன்றியம் மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட சாலைகளை நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகங்களும் அமைத்து, பராமரித்து வருகின்றன.இந்தப் பணிகள் டெண்டர் மூலம் ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்கள் மட்டுமின்றி, இதர ஒப்பந்ததாரர்களும் இந்த டெண்டரை எடுத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.பொதுவாக தார் சாலைகளை அமைக்கும் போது, பதினேழரை செ.மீ., தடிமன் கொண்டதாக இருக்க வேண்டும்; தரமான ஜல்லி மற்றும் தாரினை பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் ஒப்பந்ததாரர்களுக்கு விதிக்கப்படுகின்றன. மொத்த மதிப்பில், ஏழரை சதவீத தொகையை பிடித்தம் செய்து வைத்துக் கொண்டு, சாலைப் பணி முடித்த இரண்டு ஆண்டுகள் கழித்து, சாலையின் தரம் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்த பின்பே ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்குகின்றனர்.இது போல பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டாலும், இவை நடைமுறையில் அமலில் இல்லை. சாலைப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், பல்வேறு மட்டங்களிலும் கப்பம் கட்ட வேண்டியுள்ளதால், சாலைகள் தரமானதாக அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஒப்பந்ததாரர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:எந்த ஆட்சி அமைந்தாலும், உரிய கமிஷன் கொடுத்தால்தான், சாலைப் பணிகளை மேற்கொள்ள டெண்டர் எடுக்க முடியும்; வேலை செய்ய முடியும்; அதற்கான பணத்தை பெற முடியும் என்ற நிலை தொடர்ந்து வருகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு விகிதம் என கமிஷன் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் அமையும் சாலைப் பணிகளை மேற்கொண்டால், அமைச்சர் தரப்புக்கு ஏழு சதவீதமும், அந்த பணி நடக்கும் உள்ளூர் ஒன்றிய செயலருக்கு ஒரு சதவீதமும் கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளது.இது தவிர உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட சாலைப் பணிகளை மேற்கொள்வதானால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சியாக இருந்தால் மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கு கமிஷன் வழங்க வேண்டும்.இதன்பின், "டெண்டர் செட்டில்மென்ட்' என ஒரு சதவீதம் கொடுத்தால், சாலைப்பணி ஒதுக்கப்படும்.

பணி முடிந்தபின், அதற்கான பணத்தை பெறுவதற்கு என தனியாக, "கட்டிங்' கொடுக்க வேண்டும். இதற்கும் தனியாக பட்டியல் நடைமுறையில் உள்ளது.நெடுஞ்சாலைகளில் உதவிப் பொறியாளர்களுக்கு இரண்டு சதவீதம், உதவி கோட்ட பொறியாளர்கள், கோட்டப் பொறியாளருக்கு இரண்டு சதவீதமும் கமிஷன் வழங்க வேண்டும். ஐம்பது லட்சத்துக்கு மேல் மதிப்பீடு இருக்குமானால், தலைமைப் பொறியாளருக்கு ஒரு சதவீத கமிஷன் தனியாக வழங்க வேண்டியுள்ளது.இது தவிர, நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம், பேரூராட்சி இயக்குனர் அலுவலகம், உள்ளூர் உள்ளாட்சி அலுவலக அதிகாரிகள், நகராட்சி பொறியாளர்கள், மண்டல பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கப்பம் கட்ட வேண்டும்.

இந்த நடைமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே, பணி முடிந்து அதற்கான தொகையை பெற முடியும்.சாலைப் பணிகளை முடித்து இரண்டு ஆண்டுகள் ஆன பிறகுதான், வைப்புத் தொகையாக பிடிக்கப்படும் ஏழரை சதவீத தொகையை திரும்பத் தருகின்றனர். மாநிலம் முழுவதும் நடக்கும் சாலைப் பணிகள், இந்த அடிப்படையில்தான் நடந்து வருகின்றன. இவர்களுக்கு கமிஷன் கொடுத்து கட்டுப்படியாகாத நிலையில், பல ஒப்பந்ததாரர்கள் தொழிலை கைவிட்டுவிட்டு, வேறு தொழிலை பார்க்கப் போய் விட்டனர்.பழைய சாலைகளை கொத்தி விட்டு, சாலை போட வேண்டும். ஆனால், நாங்கள் அதன் மேல் சாலைகளை அமைத்து, புதுச்சாலை போட்டதாக கணக்கு காட்டி விடுகிறோம். இவை ஒரு மழைக்கே தாங்காது என்பது உண்மைதான்.இத்தனை பேருக்கு கமிஷன் கொடுத்து பணியை செய்தால், அரசு நிர்ணயிக்கும் தர நிர்ணயங்களை நாங்கள் எப்படி கடைபிடிக்க முடியும்? சாலை அமைப்பு பணிகளில் நடக்கும் இந்த கமிஷன் விகிதங்களை கட்டுப்படுத்தினால் மட்டும்தான், தரமான சாலைகள் அமையும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தமிழக அரசு 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மாநிலம் முழுவதும் சிறப்பு சாலைகள் அமைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்த சாலைகளாவது தரமானதாக அமைய, அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான், எந்த மழைக்கும் தாங்கக்கூடிய தரமான சாலைகள் அமையும்.

எங்கே போனது இன்ஜினியர்கள் திறமை?* அரசு ஆண்டு தோறும் சாலைகள் மேம்பாடு, சீரமைப்பு, புதிய சாலைகள் அமைத்தல், சிறுபாலங்கள் கட்டுமானம், பராமரிப்பு, ஆறுகள், ஏரிகள் தூர் வாருதல், மழைநீர் வடிகால் அமைப்பு, கால்வாய் சீரமைப்பு, சுரங்கப்பாதைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல், என பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு பணிகளை மேற்கொள்கிறது. மழை காலத்திற்கு முன் தூர் வாருகிறோம், சுத்தம் செய்கிறோம், என்ற பெயரில் பணம் செலவழித்து சுத்தம் செய்கின்றனர். ஆனால், சுத்தம் செய்து வெளியேற்றப்படும் கழிவுகளை அங்கேயே போட்டு விட்டுச் செல்வதால், மழை நீர் செல்லும் போது அவை மீண்டும் வடிகால் பகுதிக்குள்ளேயே சென்று விடுகின்றன. இதனால், செலவழித்த பணம் விரயமாகிறது.

* சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை, தகவல் தொழில் நுட்ப சாலை போன்ற சாலைகளை தனியாரே தங்கள் பணத்தைப் போட்டு உருவாக்குகின்றனர். அந்த சாலைகள் 15 ஆண்டுகள் வரை சேதம் ஏற்படாமல் தாக்குப் பிடிக்கின்றன. ஆனால், அரசு தரப்பில் போடப்படும் சாலைகள் மட்டும் ஒரு மழைக்கு கூட தாங்காமல் குண்டும், குழியுமாக ஆகிவிடுகின்றன. இங்கு சாலைகள் போடும் இதே கான்ட்ராக்டர்கள் சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளில் சாலை வசதிகளை கான்ட்ராக்ட் எடுத்து மிகவும் தரமாக, செய்து தருகின்றனர். ஆனால், நம்மூரில் சாலை போடுவது என்றால், "கட்டிங், கமிஷன்' கொடுத்த பின், "டுபாக்கூர்' சாலைகளை போட்டு விடுகின்றனர்.

*விண்ணில் ராக்கெட் செலுத்தும் அளவுக்கு தரமான பொறியாளர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் நம் நாட்டில் உள்ளனர். ஆனால், தண்ணீர் தேங்காமல் ஒரு சுரங்கப்பாதையைக் கட்டுவதற்கு கூட அவர்களால் முடியவில்லை. அதற்கு, அரசியல்வாதிகளுக்கு கொடுக்க வேண்டிய லஞ்சம் தான் தடையாக உள்ளது.

*முதல்வர், அமைச்சர்கள், வி.ஐ.பி.,க்கள் குடியிருக்கும் பகுதிகளில் மட்டும் தரமான சாலைகள், மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய், மேம்பாலங்கள் என அனைத்து வசதிகளும் உடனுக்குடன் நிறைவேறி விடுகின்றன. ஆனால், அப்பாவி மக்கள் குண்டும், குழியுமான சாலைகளில் அலுவலகம் செல்வதற்கு படாதபாடு படும் நிலை உள்ளது.

-- தினமலர் 

ஆன்-லைன் வர்த்தகத்திலிருந்து தங்கம் நீக்கமா? விலை சரிய வாய்ப்பா?

இந்தியாவில் தங்கத்தின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக, ஆன்-லைன் வர்த்தகத்திலிருந்து, டிசம்பர் முதல் வாரத்தில் தங்கத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக, வியாபாரிகள் மத்தியில் தகவல் பரவியது. இதனால், தங்கத்தின் விலையில் நேற்று திடீர் சரிவு ஏற்பட்டது.


சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்கள், உடனுக்குடன் இந்திய மார்க்கெட்டில் எதிரொலிக்கிறது. 2003ல் கிராம் 523 ரூபாய்க்கு விற்ற தங்கம், 2007 - 1,000, 2008 - 1,250, 2009 - 1,550 என தொடர்ந்து, 2010ல் ஒவ்வொரு நாளும் ஓர் விலை ஏற்றத்தை சந்தித்து, நேற்று முன்தினம் அதிகபட்சமாக, கிராம் 1,915 ரூபாய்க்கு விற்றது. இந்நிலையில் நேற்று, தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டு, கிராமுக்கு எட்டு ரூபாயும், சவரனுக்கு 64 ரூபாயும் குறைந்து, கிராம் 1,907 ரூபாய்க்கும், சவரன் 15 ஆயிரத்து 256 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் தங்கத்தை கொள்முதல் செய்வதில் நான்காம் இடத்தில் உள்ள இந்தியா, விலை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பங்கு வர்த்தகத்தை சரி செய்யும் விதமாகவும், தங்கம் விலையை கட்டுப்படுத்தும் வகையிலும், ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து தங்கம், வெள்ளி, பிளாட்டினம், வைரம் ஆகிய ஆபரணங்களை நீக்க, மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக பரவிய தகவலால், வியாபாரிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து நகை கடை உரிமையாளர் கூறியதாவது: ஆபரண பொருளாக கருதப்பட்டு வந்த தங்கம், தற்போது சர்வதேச அளவில் வர்த்தக ரீதியில் வியாபார பொருளாக கருதப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை, அவுன்ஸ் 800 முதல் 900 டாலர் என்ற அளவில் தான் இருந்தது. ஆனால், ஒரு ஆண்டாக 1,000 டாலருக்கு மேல் அதிகரித்து, தற்போது 1,442 டாலராக உயர்ந்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால், தங்கம் அவுன்ஸ் 2,000 டாலராக உயர்ந்து விடும். சர்வதேச சந்தையில் அவுன்சின் விலையில் உயர்வு ஏற்பட்டால், இந்தியாவில் தங்கம் கிராம் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை வரும். இதை தவிர்க்கவும், ஆன்-லைன் வர்த்தகத்தில் நுழைந்துள்ள சீனாவை கட்டுப்படுத்தும் வகையிலும், இந்தியாவில் தங்கம் விலையை கட்டுக்குள் கொண்டு வர, ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து, வரும் டிசம்பர் முதல் வாரத்தில் தங்கத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மும்பை வியாபாரிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து தங்கம் நீக்கப்பட்டால், தமிழகத்தில் தங்கம் விலையில் கடும் சரிவு ஏற்படும். கிராம் 1,200 ரூபாய்க்கும், சவரன் 9,600 ரூபாய்க்கும் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு உரிமையாளர் கூறினார்.



நாம் நினைத்தால் ஏன் தங்கத்தை ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து நீக்க குரல் கொடுக்க கூடாது?பிரிட்டனில் கல்வி கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் திரண்டனரே அதைபோல் ஏன் நம்மால் முடியாது?

இந்த விலை ஏற்றத்தால் நீங்கள் பாதிக்கவில்லை என்றாலும் அப்பாவி ஏழை மக்களின் துயர் துடைக்க குரல் கொடுப்போம் ,கலைஞர் மட்டும் தான் கடிதம் எழுதுவாரோ ,நாம் ஏன் இந்த பிரச்சனைக்காக கலைஞருக்கு கடிதம் எழுதக்கூடாது ?எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது இது தேவையானு நினைக்காதீங்க ,இதுவும் ஒரு பிரச்சனைதான்!

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விலை உயர்வை பார்த்து, ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏழைகளுக்கு எட்டாத உயரத்திற்கு தங்கத்தின் விலை சென்றதற்கு, ஆன்-லைன் வர்த்தகம் தான் காரணம் என்று, தங்க நகை வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வாழ்வில், தங்கம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அரசன் ஆனாலும், ஆண்டியானாலும் கடுகளவாவது தங்கம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது. இன்றைய காலகட்டங்களில் தங்கம் வெறும், "முதலீடு' என்பதுடன் நிற்காமல், சமூக அந்தஸ்து, சேமிப்பு, எப்போது வேண்டுமானாலும் விற்க முடியும் என்ற எண்ணம், காலத்தால் அழியாத்தன்மை மற்றும் தங்கம் மீது பெண்களுக்கான மோகம் ஆகியவையால் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
உலகில் தங்கத்தை அதிகமாக இருப்பு வைத்திருக்கும் நாடு அமெரிக்கா. அதிகளவில் தங்கம் வெட்டியெடுக்கப்படும் நாடு தென் ஆப்ரிக்கா. ஆனால், அதிகளவு ஆபரணத்திற்காகத் தங்கத்தைப் பயன்படுத்தும் நாடு இந்தியா. தற்போது, தங்கத்தின் விலை நாளுக்கு நாள் வரைமுறை இல்லாமல் அதிகரித்துச் செல்வது, பெண்களுக்கு தங்கத்தின் மீது கோபம் உள்ளதோ இல்லையோ, அதை வாங்கித் தராத கணவர்மார்கள் மீது தான் ஏகப்பட்ட கோபத்தில் உள்ளனர்.

தங்கம் தொடர் விலை உயர்வு குறித்து, சென்னையைச் சேர்ந்த தங்க நகை வியாபாரிகள் சிலர் கூறியதாவது: லண்டனில் தான் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் சந்தை உள்ளது. இச்சந்தை, தங்கச் சுரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து, உற்பத்தி அளவிற்கேற்ப, சந்தை விலையை நிர்ணயிக்கின்றனர். அங்கு நிர்ணயிக்கக் கூடிய விலைக்கு தகுந்தபடிதான், உலகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.
பொருளாதார மந்த நிலையில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலகச் சந்தையில் டாலர் மதிப்பு குறைந்ததால் மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும், அந்நாட்டு அரசங்கமும் தங்க முதலீட்டை உயர்த்தியதால் தங்கத்தின் விலை உயர்ந்தது.

தங்கத்தை வெட்டி எடுப்பதற்கான கொள்முதல் விலை, 2004ம் ஆண்டு ஒரு அவுன்ஸ்(31.110 மி.கி.,) தங்கத்திற்கு 400 டாலர் செலவானது. ஆனால், இன்று தங்கத்தின் இருப்பு அளவு குறைந்துள்ளதால் சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்கும் செலவும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இன்று தங்கம் விலை தினமும் உயர்வதற்கு, அப்போதைய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கொண்டுவந்த எம்.சி.எக்ஸ்., (மல்டி கமாடிட்டி எக்ஸ்சேன்ச்) எனப்படும் ஆன்-லைன் வர்த்தகமே காரணம் என, விவரம் அறிந்த வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். எம்.சி.எக்ஸ்., பட்டியலில், தங்கத்தை சேர்த்ததால், தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
இந்தியாவில் 90 சதவீதத்திற்கும் மேலாக தங்கத்தை வாங்குவோர், நடுத்தர வர்க்கத்தினர் தான். இந்த ஆன்-லைன் வர்த்தகத்தால் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட, இவர்களால் தங்கம் வாங்க முடியாத நிலை உள்ளது. கடந்த 2006ம் ஆண்டு 22 காரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 860 ரூபாய். இது, 2007ல் 875 ரூபாய், 2008ல் 1,100 ரூபாய், 2009ல் 1,300 ரூபாய், இன்று 1,800 ரூபாய் முதல் 1,900 ரூபாய் வரை வந்து விட்டது.

வங்கிகள் தங்கப் பத்திரங்களை வெளியிடுகின்றன. இது வாடிக்கையாளர்களைக் கவர்வதால் விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாகிறது. தங்க முதலீடு பாதுகாப்பான முதலீடு என்ற எண்ணம் அதிகளவில் மக்களிடம் பரவியுள்ளதும், தங்க விலை உயரக் காரணம். இன்று பெரும்பாலான மக்கள் ஆபரணத் தங்கமாக வாங்காமல், வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் விற்கப்படும் சுத்தமான 24 காரட்டில் உள்ள தங்க பிஸ்கட் மற்றும் நாணயங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இவ்வாறு தங்க நகை வியாபாரிகள்  கூறினர்