Pages

Tuesday, September 21, 2010

அசாதாரண மனிதர்கள்

இன்றைய சராசரி சாதாரண மனிதர்களே, பிற்காலத்தில் அசாதாரண மனிதர்கள் ஆகின்றனர். பிறவியிலேயே யாரும் அசாதாரண மனிதர்கள் அல்லர். இதற்கு உதாரணமாக பலரைக் கூறலாம்.

ஜெர்மானியராகப் பிறந்தவர் விஞ்ஞானமேதை ஐன்ஸ்டீன். நாஜிகலால் நாடு கடத்தப்பட்டவர். அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தவர். அமெரிக்காவில் பிரின்ஸ்டன் நகரில் உள்ள ஆராய்ச்சி சாலை அவருக்காக ஒதுக்கப்பட்டது. முதல் முறையாக அந்த ஆராய்ச்சி சாலைக்கு அவரை அழைத்துச் சென்று சுற்றிக்காட்டி அவருக்கு திருப்த்திதானா? ஏதும் வசதிக் குறைவுகள் உள்ளனவா என்று அமெரிக்க விஞ்ஞானிகள் விசாரித்தனர்.

தயங்கித் தயங்கி மெதுவான குரலில் ஐன்ஸ்டீன் சொன்னார். “இங்கு எல்லாம் வசதியாகவே இருக்கிறது. ஒரே ஒரு குறை” என்று இழுத்தார். “என்ன என்று சொல்லுங்கள் உடனே சரி செய்யப்படும்” என்றனர். அமெரிக்க விஞ்ஞானிகள் அறை ஓரத்தில் இருந்த குப்பைக் கூடையைச் சுட்டிக்காட்டி, “இது ரொம்பவும் சிறியதாக இருக்கிறதே, கொஞ்சம் பெரிய குப்பைத்கூடை இருந்தால் நல்லது” என்றார். திகைத்துப் போய் “பெரிய குப்பைக்கூடையா? எதற்கு?” என்றார்கள்.

ஐன்ஸ்டீன் சொன்னார், “நான் என்ன மேதாவியா, எல்லா ஆராய்ச்சிகளையும் முதலிலேயே சரியாகச் செய்ய… தப்புத் தப்பாகச் செய்வேன். எழுதி எழுதிப் பார்த்தால் எல்லாம் தப்புத் தப்பாக இருக்கும். உடனே கிழித்து எறிந்து விட்டு மீண்டும் மீண்டும் எழுதுவேன். இந்த முட்டாளுக்கு ஒரு விஷயத்தை சரியாகச் செய்ய நிறைய சந்தர்ப்பம் வேண்டும். தவறுகளைப் புதைக்க கொஞ்சம் பெரிய குப்பைக் கூடையும் வேண்டும்” என்றார். அவரே அப்படி என்றால்… நாமெல்லாம் எப்படி?

சாதாரண மனிதர்களில் இருந்துதான் அசாதாரணர்கள் தோன்றுகிறார்கள். நாம் சாதாரணம் என்று சாதாரணமாகி விடவேண்டாம். நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள். சின்னச் சினனத் தோல்விகள். சின்னச் சின்னச் சறுக்கல்கள்… வீழ்ச்சிகள் ஒரு பெரிய விஷயமே அல்ல. எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காதீர்கள்.

Monday, September 20, 2010

இன்றைய பெண்

சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் இன்றைய பெண்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். இவர் கூறுவது பெண்களை இழிவுபடுத்துவதற்காகவோ அல்லது குறை கூறுவதற்காகவோ கிடையாது. பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே!!! எந்த ஒரு பெண்ணும், பெண்களை இழிவுபடுத்துகிறார்கள் அல்லது தாழ்வுபடுத்துகிறார்கள் என்று தவறாக கருத வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாரப் பத்திரிக்கை, மாதப் பத்திரிக்கை படிக்கிற பெண்கள் அதிகம். ஆனால் தினப்பத்திரிக்கை படிக்கிற பெண்கள் எத்தனை பேர்? நாட்டு நடப்பு பற்றி எத்தனை பெண்கள் அக்கறை காட்டுகிறார்கள்? மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம்.

தொலைக்காட்சிப் பெட்டியில் சினிமா பார்க்கும் போது குடும்பமே பார்க்கிறது. ஆனால் செய்திகள் தொடங்கியதும் பெண்கள் அடுப்படிக்குள் பாய்ந்து உணவை தயார் செய்வது ஏன்? செய்தி நேரம் வந்ததும் சினிமாவில் இடைவெளி மாதிரி அதை சாப்பாட்டுக்குப் பயன்படுத்த பல பெண்கள் விரும்புவது உண்மைதானே! இது சரிதானா? செய்தி நேரம் என்ன சினிமா இடைவெளியா? இப்படி இருந்தால் பெண்ணின் பொது அறிவு எப்படியிருக்கும்?

பெண்களின் அழகுணர்ச்சிக்கான விலை இன்று மிகமிக அதிகம். காலக் கொலையோ அதைவிட அதிகம். எப்படி? நகங்களை வண்ணப்படுத்தி, பழைய வண்ணங்களை நீக்கப் புது வண்ணம் பூச நெயில் பாலிஷ் ரிமூவர், உதடுகளை உயரிப்பேற்ற உதட்டுச் சாயம் (லிப்ஸ்டிக்), கன்னங்களில் கவர்ச்சி கூட்ட ரூஜ், கண்ணிமைகளை பெரிதுபடுத்தி அழகைக் கூட்ட மஸ்காரா, அழகாய்க் காட்ட ஐ லைனர், கழுத்தை, முகத்தைக் கழுவிக் காட்ட கிளன்சிங் மில்க், மாஸ்க் பிளீச், தோலின் இயற்கை மணத்தை வாசனையில் புதைக்க பாடி ஸ்ப்ரே மற்றும் சென்ட் வகைகள். கொண்டை தொடங்கி கெண்டைக்கால் வரை ‘மாட்சிங்’ பார்த்து அலங்கரிக்கத் தேவையான விதவிதமான உபகரணங்கள். பொருட்ச்செலவும், நேரச் செலவும் இவ்வளவு தேவையா? யோசியுங்கள். அறிவார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். அதற்காக மம்தா பானர்ஜியாகவும், மாயாவதியாகவும் மாறச் சொல்லவில்லை. கொஞ்சம் சிக்கனம்… தேவை இக்கனம்!!!

இந்த பெண்மையின் நிலை நமது இந்தியப் பெண்ளுக்கு மட்டுமல்ல. எல்லா நாடுகளிலும் இந்த வியாதி இருக்கிறது. உதாரணமாக, அமெரிக்காவில் பல விஞ்ஞானிகள் பங்கேற்ற விருந்து ஒன்றினுக்கு உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் போயிருந்தார். அவர் மனைவி அவருடன் போக வேண்டியவர். போக முடியவில்லை. கடைசி நேரத்தில் உடம்பு சரியில்லை.

விருந்து முடிந்து வீட்டுக்குத் திரும்பிய ஐன்ஸ்டீனிடம் அவர் மனைவி கேட்டார்…. விருந்து எப்படி நடந்தது? “நன்றாக இருந்தது?” என்று சுருக்கமாக கூறிவிட்டு அங்கு தாம் சந்தித்த விஞ்ஞானிகள் பற்றியும், அவர்களுடன் விவாதித்த அறிவு பூர்வமான விஷயங்கள் பற்றியும் ஆவலுடன் ஐன்ஸ்டீன் சொல்லத் தொடங்கினார். அவர் மனைவிக்குப் பிடிக்க வில்லை.

ஐன்ஸ்டீன் மனைவி சற்றே கோபமாக, “நான் இந்த அறுவையைக் கேட்க்கவில்லை. அங்கு விருந்துக்கு வந்திருந்த பெண்கள் எந்த மாதிரி கவுன் அணிந்திருந்தார்கள் கவனித்தீர்களா?” என்று சீறினார். ஐன்ஸ்டீன் பொறுமையாக, “இதோ பார்… விருந்து மேஜைக்கு மேலே பெண்களின் முகம் மட்டும் தான் தெரிந்தது. அதனால் அவர்கள் அணிந்து வந்த ஆடை எப்படிப்பட்ட ஆடை என்று எனக்குத் தெரியாது. உனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் நான் மேஜைக்கு கீழே குனிந்து பார்த்திருக்க வேண்டும். அது அவ்வளவு கவுரமாக இருந்திருக்காது” என்றார்.

பெண்கள் வாழ்விற்கு எது தேவை என்பதை முழுமையாக புரிந்து கொண்டால் அவர்களது வாழ்க்கை வளமானதாகவும் இனிமையானதாகவும் அமையும்!

Tuesday, September 14, 2010

காற்றினிலே பெரும் காற்றினிலே

காற்றினிலே பெரும் காற்றினிலே,
ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும்,
காலம் எனும் கடலிலே சொர்கமும் நரகமும்,
அக்கரையோ இக்கரையோ?

ஆண்டவனும் கோவிலில் தூங்கிவிடும் போது,
யாரிடத்தில் கேள்வி கேட்பது,
ஏழைகளின் ஆசையும் கோவில் மணி ஓசையும்
வேறுபட்டால் என்ன செய்வது,
தர்மமே மாறுபட்டால் என்ன செய்வது,

ஆடுவது நாடகம் ஆளுக்கொரு பாத்திரம்,
இறைவனுக்கு வேஷமென்னவோ?
ஆடவைத்து பாடுவான் மூடுதிரை போடுவான்
மேடை அவன் மேடையல்லவோ
வாழ்க்கையின் பாதை அவன் பாதையல்லவோ?

-- இந்த பாடல் "துலாபாரம்(1968)" என்ற படத்தில் இடம் பெற்றது.

ஜேசுதாஸ் அவர்கள் பாடியது,

அருமையான வரிகளை கொண்ட பாடல்.

கண்ணதாசன் எழுதியது என்று நினைக்கிறேன்.

"ஆடுவது நாடகம் ஆளுக்கொரு பாத்திரம்,
இறைவனுக்கு வேஷமென்னவோ?" என்ன வரிகள்...