Pages

Showing posts with label பொது செய்திகள். Show all posts
Showing posts with label பொது செய்திகள். Show all posts

Friday, December 17, 2010

2-ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ.யை தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டிய பொறுப்பை சுப்ரீம் கோர்ட் தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளது..!

நீதியை பரிபாலனம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் உச்சநீதிமன்றம், இப்போது நீதி நிர்வாகத்தையே மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது நமது நாட்டைப் பிடித்த சோகம்தான்...!



"2-ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, சி.பி.ஐ.யும் அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். எந்த உயர் பதவியில் இருக்கும் தனி நபர் மற்றும் ஏஜென்சிகளின் நிர்பந்தங்களுக்கும் கட்டுப்படாமல், விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கடந்த 2001 முதல் 2008-ம் ஆண்டுவரை நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். அதாவது, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட தொலைத் தொடர்பு கொள்கை பற்றி விசாரிக்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு எந்த அளவுக்கு இழப்பு ஏற்பட்டது  என்பதற்கு, விசாரணையின்போது அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

இந்த விசாரணையின் நிலை அறிக்கையை, சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும், 2011, பிப்ரவரி 10-ம் தேதி, சீலிட்ட கவரில் வைத்து சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட் கண்காணிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்து விட்டதால், இந்த மோசடி பற்றி விசாரிக்க சிறப்புக் குழு எதையும் அமைக்க வேண்டிய தேவையில்லை.

ஏனெனில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் விரிவான விசாரணை மேற்கொள்வர் என, சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியமும், சி.பி.ஐ., சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் வேணுகோபாலும் உறுதி அளித்துள்ளதால், சிறப்புக் குழுவுக்கு அவசியம் இல்லை.

தகுதியில்லாத நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஆடிட்டர் ஜெனரல் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதில், உண்மையிருப்பதாக தெரிகிறது' எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

2-ஜி ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் அளித்த கடன் குறித்த விவரங்கள் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். இந்த ஊழலில் வங்கிகளுக்குப் பங்கு உள்ளதா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.

- உரிம ஒப்பந்தத்தில், எந்தெந்த தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

- உரிமம் பெற தகுதியற்ற நிறுவனங்கள் மீது டிராய் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கண்டறிய வேண்டும்.

- 2 ஜி உரிமம் வழங்கியதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று மனுதாரரான மூ்த்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களில் இந்த பெஞ்ச் திருப்தி அடைகிறது. குற்றம் நடந்ததற்கான பூர்வாங்கம் இருப்பதாகவும் உணர்கிறது.

- 2-ஜி ஏலம் தொடர்பான வழக்கு விசாரணையில் சிபிஐ பின் வாங்கியது, பதுங்கியது, தாமதம் செய்தது என்ற பூஷனின் குற்றச்சாட்டையும் இந்த கோர்ட் ஏற்கிறது.

- இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு விட வேண்டும் என்று கோரி மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்காமல் டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது, தவறாகும் என்று இந்த கோர்ட் கருதுகிறது.

- தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையரின் அறிக்கை மற்றும் பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஏலம் முற்றிலும முறைகேடாக நடந்திருப்பதையும் இந்த கோர்ட் உறுதிப்படுத்துகிறது.

- சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்தவுள்ள விசாரணையின்போது இந்த 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு நடைமுறையால் நாட்டுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது என்பதையும் தெளிவாக கண்டுபிடிக்க வேண்டும்.

- நீரா ராடியா பேசிய பேச்சுக்கள் அடங்கிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் அனைத்தையும் வருமான வரித்துறை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்.

இப்படி அடுக்கடுக்கான உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இதில் இருந்து தெரிவது என்னவென்றால் ஒரு வழக்கு விசாரணையை எந்தத் திசையில் நகர்த்துவது, நடத்துவது என்றுகூட செய்யத் தெரியாமல் தேங்கி நிற்கும் அரசுதான் இன்றைக்கு நம்மை ஆண்டு வருகிறது என்பதுதான்..!

உச்சநீதிமன்றத்தின் விளாசலைப் பொறுக்க மாட்டாமல்தான் லண்டனில் பதுங்கியிருந்த நீரா ராடியாவை அவசரமாக வரவழைத்து நேரில் விசாரித்தார்கள்.

நாடு முழுவதும் அதிரடி ரெய்டு நடத்தினார்கள். ராசா மற்றும் அவரது கொள்ளைக் கூட்டத்தினரை மிரட்டுவதாக நமக்கு பாவ்லா காட்டி சோதனை நடத்தினார்கள். இப்படி முதல்வர் வீட்டு ஆடிட்டர்வரையில் தங்களது கைவரிசையைக் காட்டி ஷோ காட்டியிருக்கிறது சி.பி.ஐ.

ஆனால் என்ன எடுத்தார்கள்..? எதைக் கண்டுபிடித்தார்கள் என்பதை அவர்கள் இனி சொன்னாலும் ஒன்றுதான்.. சொல்லாமல் விட்டாலும் ஒன்றுதான்..!

இத்தனை பெரிய நீதித்துறை கட்டமைப்பையே ஏமாற்றத் துணிந்த கொள்ளைக் கூட்டம், இவ்வளவு காலமா ஆதாரங்களை  விட்டு வைத்திருக்கப் போகிறார்கள்..?



சரி.. சுப்ரீம் கோர்ட்டின் நேரடி டைரக்ஷனில் சிபிஐ இயங்கக் கூடிய நிலைமைக்குப் போய்விட்டதே என்று நமது பிரதமர் என்று சொல்லப்படும் மன்னமோகனசிங் கொஞ்சமாவது கவலைப்படுவார் என்று நினைத்தீர்களா..? நிச்சயமாக இருக்காது..

மானம், அவமானம் பற்றியெல்லாம் இனிமேலும் அவர் யோசித்துக் கொண்டிருந்தால் பிரதமர் பதவியில் அவர் நீடித்திருக்க முடியாது..  அதிகாரத்தைப் பிடுங்கி வைத்துக் கொண்டு, நீ எதற்கும் லாயக்கில்லை. வீட்ல சும்மா இரு என்று நீதிமன்றமே சொல்கின்றவரையில்தான் இவரது வேலை பார்க்கும் லட்சணம் இருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவருக்கு நரசிம்மராவே பரவாயி்ல்லை போலிருக்கிறது..!


இவ்வளவுக்குப் பிறகும் இவர் பிரதமர் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது அரசியல்வியாதிகளுக்கு உரித்தான குணம்தான்..! இப்போதெல்லாம் கோர்ட், கேஸ், புகார்கள் இவையெல்லாம் தினம்தினம் அரசியல்வியாதிகள் சந்திக்கின்ற விஷயங்களாகப் போய்விட்டதால் இதெல்லாம் இவர்களுக்கு மரத்துப் போயிருக்கும்..

இவர்தான் இப்படியென்றால் நமது கல்லுளிமங்கன், தமிழினத் தலைவன், ஊழல் தாத்தா கலைஞர் கருணாநிதி மன்னமோகனசிங்கையும் மிஞ்சிவிட்டார்.

போயஸ் ஆத்தா விடும் அறிக்கைக்கு உடனுக்குடன் பதில் அளித்து நோஸ் கட் அளிக்கும் பணியைச் செவ்வனே செய்து வரும் இவரும், இவரது குடும்ப உறுப்பினர்களும் நீரா ராடியா டேப்புகள் பற்றி மட்டும் இன்றுவரையிலும் வாய் திறக்காதது ஏன்..?

ஜெயலலிதாவின் ஒவ்வொரு அறிக்கையையும் கண் கொத்திப் பாம்பாக பார்த்து வந்து முதல் நாள் அறிக்கையின் முதல் பத்தி, இரண்டாவது நாள் அறிக்கையின் இரண்டாம் பத்தியாக வந்திருக்கிறதே என்று கேட்கின்ற அளவுக்கு புத்திக் கூர்மையுள்ள இந்த மனிதர் தனது மகளும், மனைவியும் ஒரு அரசியல் புரோக்கருடன் தனது கட்சியை விலை பேசும் உண்மை வெளிவந்து இத்தனை நாட்களாகியும் கள்ள மெளனம் சாதித்து வருகிறாரே இது ஏனாம்..?

நேற்றைய ரெய்டுகளுக்குப் பிறகு இவரது துணைவியார் வாய் திறந்து ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். வோல்டாஸ் நிறுவனம் மற்றும் டாடா நிறுவனத்திற்குமான பிரச்சினையில் தனக்குச் சம்பந்தமில்லையென்று சொல்லியிருக்கிறார்.

வோல்டாஸ் நிறுவனம் அமைந்திருக்கும் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்தின் பவர் ஆஃப் அட்டர்னி தன்னுடைய ராயல் பர்னிச்சர் கடையில் பர்னிச்சர்களைத் துடைக்கும் வேலை செய்து கொண்டிருந்த சரவணன் என்பவருக்குக் கிடைத்தது. அவருக்குத்தான் இதில் தொடர்பு என்று கூறியிருக்கிறார்.

இப்படி கடையில் தூசி தட்டியவருக்கு இத்தனை கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்கும் அதிகாரத்தைக் கொடுப்பதற்கு டாடா நிறுவனத்தினர் என்ன முட்டாள்களா என்று நாம் திருப்பிக் கேட்கக் கூடாது.. ஏனெனில் இப்படி அறிக்கைவிட்டவர் தமிழினத்தின் தலைவரான கலைஞர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தியம்மாள். அவர் ஒன்று சொன்னால் ஒன்பது சொன்னதற்குச் சமம். கையது வாயது பொத்தி அமைதியாக இருங்கள் என்கிறார்கள்.

இவருடைய திருமகள் கனிமொழியும் நேற்றுதான் வாய் திறந்திருக்கிறார். இதுநாள்வரையிலும் தனது குடும்ப பிரச்சினைகளெல்லாம் வீதிதோறும், ஊர்தோறும், சேனல்கள்தோறும், பத்திரிகைகள்தோறும் நாறிய பின்பும் கண்டுகொள்ளாமல் பணம், அதிகாரம் இரண்டை மட்டுமே லட்சியமாகக் கொண்டு சிரிப்போடு வலம் வரும் இந்த அம்மணி தனக்கும், இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்று அறிக்கை விட்டிருக்கிறார்.

ஆனால் நீரா ராடியாவுடனான பேச்சுக்கள் பற்றி கலைஞர், அவருடைய துணைவியார், மகள், மகன்களான மத்திய அமைச்சர்கள், டேப் பேச்சில் படிபட்ட அமைச்சர்கள், அடிப்பொடிகளான உடன்பிறப்புக்கள் என்று அனைவரும் பதில் சொல்லாமல் இருப்பதில் இருந்தே அவைகள் அனைத்தும் உண்மை என்பது தெளிவாகிறது..!

நேற்று அமைச்சர் பூங்கோதையிடம் இது பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டதற்கும் அவர் பதில் சொல்லாமல் சென்றிருக்கிறார்.

நித்தியானந்தா ஜெயில் செல்லில் படுத்திருந்த விஷயத்தையே நான்கு தலைப்புகளில் வெளியிட்டு பிரத்யேகச் செய்தி என்று கொண்டாடிய நக்கீரன் தனது இணை ஆசிரியர் வீட்டில் நடந்த ரெய்டையும், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற கதையையும் சுத்தமாக மறைத்துவிட்டது. ஒரு சிறிய செய்திகூட அது பற்றி வெளியிடவில்லை.

இப்படியொரு இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகையாளராக நக்கீரன் கோபால் இத்தனையாண்டு காலத்திற்குப் பிறகு உருவெடுத்திருப்பதற்கு அவருக்கு நமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வோம்..!

ஆக மொத்தம், பொதுச் சொத்தைத் திருடிய கூட்டம் இன்றைக்கு தேள் கொட்டிய திருடனைப் போல் திருதிருவென முழிக்கிறது.

இந்தக் கள்ள நாடகத்தில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகர்கள் இவர்கள்தான் என்பதால் இந்த நடிப்பு இவர்களுக்குக் கை வந்த கலை. திரை விழுகும்வரையில் நடிப்பைக் கொட்டிவிட்டுத்தான் போவார்கள்..!

அடுத்த முறை இவர்களை நாடக மேடையில் ஏற விடாமல் தடுக்கும் பணியை மட்டும் நாம் செய்தால், அது நமக்கும் நல்லது.. நமது வாரிசுகளுக்கும் நல்லது..!

Monday, December 6, 2010

எங்கும் எதிலும் ஒரே லஞ்சமயம்; சாலை சீரமைப்பு ஒப்பந்தம் பெறவும் லஞ்சம்; பணம் பெறவும் லஞ்சம்

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மாநிலம் முழுவதும் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் தரம் குறைவாக போடப்பட்ட சாலைகள், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சாலைகள் பாதிப்பால், பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் முக்கியப் பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலைகளை, மாநில நெடுஞ்சாலைத்துறை அமைத்து, பராமரித்து வருகிறது. இது தவிர, மாநகராட்சி நிர்வாகம் தங்களுக்கு உட்பட்ட சாலைகளையும், நகராட்சி நிர்வாகம் தங்களுக்கு உட்பட்ட சாலைகளையும், ஒன்றியம் மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட சாலைகளை நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகங்களும் அமைத்து, பராமரித்து வருகின்றன.இந்தப் பணிகள் டெண்டர் மூலம் ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்கள் மட்டுமின்றி, இதர ஒப்பந்ததாரர்களும் இந்த டெண்டரை எடுத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.பொதுவாக தார் சாலைகளை அமைக்கும் போது, பதினேழரை செ.மீ., தடிமன் கொண்டதாக இருக்க வேண்டும்; தரமான ஜல்லி மற்றும் தாரினை பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் ஒப்பந்ததாரர்களுக்கு விதிக்கப்படுகின்றன. மொத்த மதிப்பில், ஏழரை சதவீத தொகையை பிடித்தம் செய்து வைத்துக் கொண்டு, சாலைப் பணி முடித்த இரண்டு ஆண்டுகள் கழித்து, சாலையின் தரம் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்த பின்பே ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்குகின்றனர்.இது போல பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டாலும், இவை நடைமுறையில் அமலில் இல்லை. சாலைப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், பல்வேறு மட்டங்களிலும் கப்பம் கட்ட வேண்டியுள்ளதால், சாலைகள் தரமானதாக அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஒப்பந்ததாரர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:எந்த ஆட்சி அமைந்தாலும், உரிய கமிஷன் கொடுத்தால்தான், சாலைப் பணிகளை மேற்கொள்ள டெண்டர் எடுக்க முடியும்; வேலை செய்ய முடியும்; அதற்கான பணத்தை பெற முடியும் என்ற நிலை தொடர்ந்து வருகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு விகிதம் என கமிஷன் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் அமையும் சாலைப் பணிகளை மேற்கொண்டால், அமைச்சர் தரப்புக்கு ஏழு சதவீதமும், அந்த பணி நடக்கும் உள்ளூர் ஒன்றிய செயலருக்கு ஒரு சதவீதமும் கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளது.இது தவிர உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட சாலைப் பணிகளை மேற்கொள்வதானால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சியாக இருந்தால் மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கு கமிஷன் வழங்க வேண்டும்.இதன்பின், "டெண்டர் செட்டில்மென்ட்' என ஒரு சதவீதம் கொடுத்தால், சாலைப்பணி ஒதுக்கப்படும்.

பணி முடிந்தபின், அதற்கான பணத்தை பெறுவதற்கு என தனியாக, "கட்டிங்' கொடுக்க வேண்டும். இதற்கும் தனியாக பட்டியல் நடைமுறையில் உள்ளது.நெடுஞ்சாலைகளில் உதவிப் பொறியாளர்களுக்கு இரண்டு சதவீதம், உதவி கோட்ட பொறியாளர்கள், கோட்டப் பொறியாளருக்கு இரண்டு சதவீதமும் கமிஷன் வழங்க வேண்டும். ஐம்பது லட்சத்துக்கு மேல் மதிப்பீடு இருக்குமானால், தலைமைப் பொறியாளருக்கு ஒரு சதவீத கமிஷன் தனியாக வழங்க வேண்டியுள்ளது.இது தவிர, நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம், பேரூராட்சி இயக்குனர் அலுவலகம், உள்ளூர் உள்ளாட்சி அலுவலக அதிகாரிகள், நகராட்சி பொறியாளர்கள், மண்டல பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கப்பம் கட்ட வேண்டும்.

இந்த நடைமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே, பணி முடிந்து அதற்கான தொகையை பெற முடியும்.சாலைப் பணிகளை முடித்து இரண்டு ஆண்டுகள் ஆன பிறகுதான், வைப்புத் தொகையாக பிடிக்கப்படும் ஏழரை சதவீத தொகையை திரும்பத் தருகின்றனர். மாநிலம் முழுவதும் நடக்கும் சாலைப் பணிகள், இந்த அடிப்படையில்தான் நடந்து வருகின்றன. இவர்களுக்கு கமிஷன் கொடுத்து கட்டுப்படியாகாத நிலையில், பல ஒப்பந்ததாரர்கள் தொழிலை கைவிட்டுவிட்டு, வேறு தொழிலை பார்க்கப் போய் விட்டனர்.பழைய சாலைகளை கொத்தி விட்டு, சாலை போட வேண்டும். ஆனால், நாங்கள் அதன் மேல் சாலைகளை அமைத்து, புதுச்சாலை போட்டதாக கணக்கு காட்டி விடுகிறோம். இவை ஒரு மழைக்கே தாங்காது என்பது உண்மைதான்.இத்தனை பேருக்கு கமிஷன் கொடுத்து பணியை செய்தால், அரசு நிர்ணயிக்கும் தர நிர்ணயங்களை நாங்கள் எப்படி கடைபிடிக்க முடியும்? சாலை அமைப்பு பணிகளில் நடக்கும் இந்த கமிஷன் விகிதங்களை கட்டுப்படுத்தினால் மட்டும்தான், தரமான சாலைகள் அமையும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தமிழக அரசு 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மாநிலம் முழுவதும் சிறப்பு சாலைகள் அமைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்த சாலைகளாவது தரமானதாக அமைய, அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான், எந்த மழைக்கும் தாங்கக்கூடிய தரமான சாலைகள் அமையும்.

எங்கே போனது இன்ஜினியர்கள் திறமை?* அரசு ஆண்டு தோறும் சாலைகள் மேம்பாடு, சீரமைப்பு, புதிய சாலைகள் அமைத்தல், சிறுபாலங்கள் கட்டுமானம், பராமரிப்பு, ஆறுகள், ஏரிகள் தூர் வாருதல், மழைநீர் வடிகால் அமைப்பு, கால்வாய் சீரமைப்பு, சுரங்கப்பாதைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல், என பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு பணிகளை மேற்கொள்கிறது. மழை காலத்திற்கு முன் தூர் வாருகிறோம், சுத்தம் செய்கிறோம், என்ற பெயரில் பணம் செலவழித்து சுத்தம் செய்கின்றனர். ஆனால், சுத்தம் செய்து வெளியேற்றப்படும் கழிவுகளை அங்கேயே போட்டு விட்டுச் செல்வதால், மழை நீர் செல்லும் போது அவை மீண்டும் வடிகால் பகுதிக்குள்ளேயே சென்று விடுகின்றன. இதனால், செலவழித்த பணம் விரயமாகிறது.

* சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை, தகவல் தொழில் நுட்ப சாலை போன்ற சாலைகளை தனியாரே தங்கள் பணத்தைப் போட்டு உருவாக்குகின்றனர். அந்த சாலைகள் 15 ஆண்டுகள் வரை சேதம் ஏற்படாமல் தாக்குப் பிடிக்கின்றன. ஆனால், அரசு தரப்பில் போடப்படும் சாலைகள் மட்டும் ஒரு மழைக்கு கூட தாங்காமல் குண்டும், குழியுமாக ஆகிவிடுகின்றன. இங்கு சாலைகள் போடும் இதே கான்ட்ராக்டர்கள் சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளில் சாலை வசதிகளை கான்ட்ராக்ட் எடுத்து மிகவும் தரமாக, செய்து தருகின்றனர். ஆனால், நம்மூரில் சாலை போடுவது என்றால், "கட்டிங், கமிஷன்' கொடுத்த பின், "டுபாக்கூர்' சாலைகளை போட்டு விடுகின்றனர்.

*விண்ணில் ராக்கெட் செலுத்தும் அளவுக்கு தரமான பொறியாளர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் நம் நாட்டில் உள்ளனர். ஆனால், தண்ணீர் தேங்காமல் ஒரு சுரங்கப்பாதையைக் கட்டுவதற்கு கூட அவர்களால் முடியவில்லை. அதற்கு, அரசியல்வாதிகளுக்கு கொடுக்க வேண்டிய லஞ்சம் தான் தடையாக உள்ளது.

*முதல்வர், அமைச்சர்கள், வி.ஐ.பி.,க்கள் குடியிருக்கும் பகுதிகளில் மட்டும் தரமான சாலைகள், மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய், மேம்பாலங்கள் என அனைத்து வசதிகளும் உடனுக்குடன் நிறைவேறி விடுகின்றன. ஆனால், அப்பாவி மக்கள் குண்டும், குழியுமான சாலைகளில் அலுவலகம் செல்வதற்கு படாதபாடு படும் நிலை உள்ளது.

-- தினமலர் 

ஆன்-லைன் வர்த்தகத்திலிருந்து தங்கம் நீக்கமா? விலை சரிய வாய்ப்பா?

இந்தியாவில் தங்கத்தின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக, ஆன்-லைன் வர்த்தகத்திலிருந்து, டிசம்பர் முதல் வாரத்தில் தங்கத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக, வியாபாரிகள் மத்தியில் தகவல் பரவியது. இதனால், தங்கத்தின் விலையில் நேற்று திடீர் சரிவு ஏற்பட்டது.


சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்கள், உடனுக்குடன் இந்திய மார்க்கெட்டில் எதிரொலிக்கிறது. 2003ல் கிராம் 523 ரூபாய்க்கு விற்ற தங்கம், 2007 - 1,000, 2008 - 1,250, 2009 - 1,550 என தொடர்ந்து, 2010ல் ஒவ்வொரு நாளும் ஓர் விலை ஏற்றத்தை சந்தித்து, நேற்று முன்தினம் அதிகபட்சமாக, கிராம் 1,915 ரூபாய்க்கு விற்றது. இந்நிலையில் நேற்று, தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டு, கிராமுக்கு எட்டு ரூபாயும், சவரனுக்கு 64 ரூபாயும் குறைந்து, கிராம் 1,907 ரூபாய்க்கும், சவரன் 15 ஆயிரத்து 256 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் தங்கத்தை கொள்முதல் செய்வதில் நான்காம் இடத்தில் உள்ள இந்தியா, விலை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பங்கு வர்த்தகத்தை சரி செய்யும் விதமாகவும், தங்கம் விலையை கட்டுப்படுத்தும் வகையிலும், ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து தங்கம், வெள்ளி, பிளாட்டினம், வைரம் ஆகிய ஆபரணங்களை நீக்க, மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக பரவிய தகவலால், வியாபாரிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து நகை கடை உரிமையாளர் கூறியதாவது: ஆபரண பொருளாக கருதப்பட்டு வந்த தங்கம், தற்போது சர்வதேச அளவில் வர்த்தக ரீதியில் வியாபார பொருளாக கருதப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை, அவுன்ஸ் 800 முதல் 900 டாலர் என்ற அளவில் தான் இருந்தது. ஆனால், ஒரு ஆண்டாக 1,000 டாலருக்கு மேல் அதிகரித்து, தற்போது 1,442 டாலராக உயர்ந்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால், தங்கம் அவுன்ஸ் 2,000 டாலராக உயர்ந்து விடும். சர்வதேச சந்தையில் அவுன்சின் விலையில் உயர்வு ஏற்பட்டால், இந்தியாவில் தங்கம் கிராம் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை வரும். இதை தவிர்க்கவும், ஆன்-லைன் வர்த்தகத்தில் நுழைந்துள்ள சீனாவை கட்டுப்படுத்தும் வகையிலும், இந்தியாவில் தங்கம் விலையை கட்டுக்குள் கொண்டு வர, ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து, வரும் டிசம்பர் முதல் வாரத்தில் தங்கத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மும்பை வியாபாரிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து தங்கம் நீக்கப்பட்டால், தமிழகத்தில் தங்கம் விலையில் கடும் சரிவு ஏற்படும். கிராம் 1,200 ரூபாய்க்கும், சவரன் 9,600 ரூபாய்க்கும் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு உரிமையாளர் கூறினார்.



நாம் நினைத்தால் ஏன் தங்கத்தை ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து நீக்க குரல் கொடுக்க கூடாது?பிரிட்டனில் கல்வி கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் திரண்டனரே அதைபோல் ஏன் நம்மால் முடியாது?

இந்த விலை ஏற்றத்தால் நீங்கள் பாதிக்கவில்லை என்றாலும் அப்பாவி ஏழை மக்களின் துயர் துடைக்க குரல் கொடுப்போம் ,கலைஞர் மட்டும் தான் கடிதம் எழுதுவாரோ ,நாம் ஏன் இந்த பிரச்சனைக்காக கலைஞருக்கு கடிதம் எழுதக்கூடாது ?எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது இது தேவையானு நினைக்காதீங்க ,இதுவும் ஒரு பிரச்சனைதான்!

Thursday, November 25, 2010

சீதை தீக்குளித்தது ஏன்?

ராவணனிடம் இருந்து மீட்கப்பட்ட சீதையின் கற்புநெறியை நிரூபிக்க தீக்குளிக்கும்படி ராமன் சொன்னதை பெண் சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. ராமனே இப்படி சந்தேகப்படலாமா? என்று கூறுவதுண்டு. ஆனால் சீதையால் அக்னிபகவான் தனது தூய்மையை மீண்டும் பெறவே இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது. ராவணனின் யாகசாலையில் வேலைசெய்த அக்னிபகவான் பல பாவங்களை செய்ய வேண்டியதாக இருந்தது. பல முனிவர்களையும் சாதுக்களையும் ராவணனின் உத்தரவுப்படி அவன் அழித்தான். இந்த பாவத்தில் இருந்து நீங்கி பரிசுத்தம் ஆகவேண்டுமானால் சீதாதேவி என்னுள் மூழ்கி எழவேண்டும் என கோரிக்கை விடுத்தான். ராமனும் அதை ஏற்றுக்கொண்டு சீதாவை தீயில் மூழ்கிவரும்படி உத்தரவிட்டான். பகவானின் உத்தரவை ஏற்ற சீதா தீக்குள் இறங்கினாள். அவளது கற்புத்தீ முன் அக்னியின் பாவங்கள் எல்லாம் அழிந்துபோயின. இதுதான் சீதாதேவி அக்னிக்குள் இறங்கிய வரலாறு. நெருப்பையும் பரிசுத்தமாக்கும் வல்லமை பெற்றவள் சீதா.

சீதை கடத்தப்பட்ட ஊர்

ராமனும் சீதையும் வனவாசம் செய்தபோது ராவணன் சீதையை தூக்கி சென்றான். பஞ்சவடி என்ற இடத்தில் தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. பஞ்சவடி தற்போதைய நாசிக் என்ற ஊரின் ஒரு பகுதியாகும். மும்பையிலிருந்து 117 மைல் தூரத்தில் நாசிக் அமைந்துள்ளது. இங்கு கோதாவரி ஆறு பாய்கிறது. சூர்ப்பனகை இங்கு வந்துதான் சீதையை பார்த்து தனது அண்ணனிடம் தகவல் சொன்னாள். அப்போது லட்சுமணன் அவளது மூக்கை அறுத்தான். மூக்கு அறுபட்ட இந்த இடத்திற்கு நாசிகை என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே காலப்போக்கில் நாசிக் என்று ஆயிற்று.

--தினமலர்

Friday, November 12, 2010

தேவையா ஸ்பெக்ட்ரம் 2 ஜி?

ஸ்பெக்ட்ரம் 2 ஜி ஒதுக்கீட்டால் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என, மத்திய அரசின் தணிக்கை துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த தொகை இருந்தால், தமிழக அரசு மூன்று ஆண்டுகளுக்கு பட்ஜெட் போட்டிருக்க முடியும்; எத்தனையோ திட்டங்களை செயல்படுத்தியிருக்க முடியும். இவ்வளவு பெரிய தொகை இருந்தால், ஒரு மாநிலத்தையே தலைகீழாக மாற்றிவிட முடியும். இந்த ஒதுக்கீட்டால் அரசுக்கு ஆண்டுதோறும் வருமானம் கிடைக்கும் என்றும், முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்றும், ஐந்து தனியார் மட்டுமே இத்துறையில் இருந்ததை மாற்றி மேலும் சில தனியாரை கொண்டு வந்ததாகவும், அமைச்சர் ராஜா தரப்பில் தொடர்ந்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், இவ்வளவு பெரிய தொகை இருந்திருந்தால், தமிழக அரசு மூன்று ஆண்டுகளுக்கு பட்ஜெட் போட்டு விட முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.


இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டில், வரவுகள் 63 ஆயிரத்து 91 கோடியே 74 லட்சம் ரூபாய் எனவும், செலவுகள் 66 ஆயிரத்து 488 கோடியே 19 லட்சம் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 3,396 கோடியே 45 லட்சம் ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஆகிறது. இதுதவிர, கடன்கள், முன்பணம், மூலதனச் செலவுகளை கணக்கிட்டால், 16 ஆயிரத்து 222 கோடியே 13 லட்சம் ரூபாய் நிதிப் பற்றாக்குறை காட்டப்பட்டுள்ளது. எனவே, 1.76 லட்சம் கோடி ரூபாய் இருந்தால், 10 ஆண்டுகளுக்கு பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் போட முடியும். தமிழக அரசு எந்த வருவாயும் பெறாமல், மூன்று ஆண்டுகளுக்கு பட்ஜெட் போட்டு விட முடியும். உணவு மானியத்துக்காக மட்டும் தமிழக அரசு 4,000 கோடி ரூபாய் ஒதுக்குகிறது. 1.76 லட்சம் கோடி இருந்தால், பெட்ரோல் முதல் அனைத்து பொருட்களையுமே மிக மிக மலிவான விலையில் வழங்க முடியும். அதுமட்டுமன்றி, நதிநீர் இணைப்பு, புல்லட் ரயில், இருவழி ரயில் பாதை, தனி சரக்கு காரிடர், சாலை வசதிகள் என அனைத்து மிகப் பெரிய திட்டங்களையும் இத்தொகையில் செயல்படுத்தி, தமிழகத்தையே சிங்கப்பூராக மாற்றிவிட முடியும்.


தமிழகத்தில் நான்கு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் தொகையை பிரித்துக் கொடுத்தால், ஒரு ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய் தர முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஐந்து ஓட்டுகள் உள்ள குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் தர முடியும். பொருளாதார வல்லுனர்கள் இந்த தகவல்களை தெரிவித்துள்ளனர். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாக அமையும் என்பதில் வியப்பில்லை.


source : Dinamalar

Saturday, June 26, 2010

ப்ப்ப்ளான் பண்ணி... படியுங்க


விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம், "கல்வி என்பது என்ன?" என்று ஒருவர் கேட்டார். அதற்கு, "நீங்கள் உங்கள் பள்ளிக்கூடத்தை விட்டு வந்து பல வருடம் ஆகியிருக்கும். ஆனால், அதன் பின்பும் உங்கள் மனதில் அங்கு கற்ற விஷயங்களில் எது நினைவில் இருக்கிறதோ... அதுதான் நீங்கள் உண்மையில் கற்ற கல்வி" என்றாராம் ஐன்ஸ்டீன்.

'வெள்ளத்தாலும், நெருப்பாலும் அழிக்க முடியாத பெருஞ்செல்வம், ஒருவன் கற்ற கல்வி' என்றார் வள்ளுவர்.

நம் வீட்டுக் குழந்தைகள் நன்றாகப் படித்து முன்னேறினால் போதும் என நல்ல ஸ்கூல் தேடி அலைந்து, க்யூவில் நின்று அப்ளிக்கேஷன் வாங்கி பல ஆயிரங்களை செலவு செய்து அந்த கல்வியைக் கொடுப்பதற்கு காரணமே... அதைத் தவிர பெருஞ்செல்வம் வேறு எதுவும் இல்லை என்பதுதான். அத்தகைய கல்வி... முழுமையான, சிறந்ததான, பயன் கொடுக்கவல்லதாக அமைய சில அனுபவ வழிமுறைகளைச் சொல்கிறது இந்த டிப்ஸ் புத்தகம். உங்கள் அனுபவத்தோடு இதனையும் சேர்த்து செயல்படுத்திப் பாருங்கள். தனலஷ்மியையும் தானே அழைத்து வருவாள் சரஸ்வதி!

ஆல் த பெஸ்ட்!

ப்ப்ப்ளான் பண்ணி... படியுங்கள்!

1. ஆசிரியருக்காக, மார்க்குக்காக ஒரு பாடத்தை 'படிக்க வேண்டுமே...' என படிக்காமல், என்ன நோக்கத்துக்காகப் படிக்கிறோம் என்ற தெளிவுடன் படித்தால், படிப்பது உடனே மனதில் பதியும்.

2. சில பாடங்களை நேரடியாகப் படிக்காமல், அதற்கு முந்தைய... அதாவது ஐந்தாம் பாடமென்றால், நான்காம் பாடத்தை மீண்டும் ஒரு முறை வாசித்துவிட்டு, அடுத்த பாடத்துக்கு வந்தால் படிக்கப் படிக்க எளிதாக இருக்கும். குழப்பங்கள் வராது.


3. 'எத்தனை மணி நேரம் படிக்க வேண்டும்..?' - இதுதான் எல்லாருக்கும் வருகிற முதல் சந்தேகம். தொடர்ந்து 40-45 நிமிடங்கள் படிக்கலாம். திடீரென மூளை சோர்வடைந்தது போல் தோன்றினால் 5 நிமிட ரெஸ்ட்டுக்குப் பிறகு மீண்டும் தொடரலாம். எவ்வளவு மணி நேரம் என்பது அவரவர் திறமையையும், பாடத்திட்டத்தையும் பொறுத்தது. இது ஆளுக்கு ஆள் மாறுபடும்.
4. இந்த சப்ஜெக்டை இத்தனை மணி நேரத்துக்குள் படித்துவிட வேண்டும் என்ற முடிவோடு உட்காருங்கள். உதாரணமாக, பாட்டனியில் தாவர செல் அனாடமியை காலை 6.30 - 7.30-க்குள் படித்து முடித்து விட வேண்டும் என்று உட்காருங்கள். நிச்சயம் முடித்திருப்பீர்கள். அப்படி முடியாமல் போனால் இன்னும் அரை மணி நேரத்துக்குள் படிக்க வேண்டும் என்று நேரத்தை நீட்டியுங்கள். நேர நிர்வாகம் படிப்பில் மிக முக்கியம்.

5. 'இந்த நேரத்துக்குள் இந்த சப்ஜெக்ட்டை படித்து முடித்து விடுவேன்' என்று நேரத்தை ஒதுக்கீடு செய்வதற்கு முன்பாக, உங்கள் திறமை, பாடத்தின் எளிமை, கடினம் இதையெல்லாம் கணக்கிட்டு, 'டைம் அலாட்' செய்யுங்கள்.

6 கஷ்டமான மேத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி ஃபார்முலாக்கள், உயிரியல் சயின்டிஃபிக் நேம்ஸ்களை டேப், சி.டி. அல்லது பென்டிரைவ்வில் பதிவு செய்து போட்டுக் கேட்கலாம்.

7. உங்களுக்கு ஒரு பாடமோ, ஒரு பாடத்தில் ஒரு பிரிவோ புரியவில்லை எனில், அதை நீங்களே வாய்விட்டு ஆசிரியர் போல உங்களுக்கே சொல்லித் தந்து பாருங்கள். உடனே எளிமையாகப் புரியும்.

8. எல்லாவற்றையும்விட, 'நன்றாக படிப்பது என்பது என் பொறுப்பு. அதுதான் என் வேலை. என்னைப் பெற்றவர்களுக்கு நான் செய்யும் சிறந்த கடமை' என்ற எண்ணத்தைப் படிக்கும் மாணவர்கள் ஆழமாக பதியவைத்துக் கொண்டால், கடமை கரும்பாக இனிக்கும்.

9. எங்கு படிக்க வேண்டும்..? எங்கு வேண்டுமானாலும். ஆனால், படிக்கும் சூழல்... அமைதியாக, சுத்தமாக, கவனத்தை சிதறடிக்காத இடமாக இருத்தல் அவசியம்.

ஸ்பெஷல் ஸ்டடி...குரூப் ஸ்டடி!

10. யாருடனும் உட்கார்ந்து படிக்காமல் தனியாக உட்கார்ந்து படித்தால்தான் உடனே மனதில் பதியும் என்று நம்பினால் தொடர்ந்து அப்படியே படியுங்கள். 'குரூப் ஸ்டடி' கை கொடுத்தால், நல்ல குரூப் அமைத்துக் கொள்ளுங்கள்.

11. எந்த நேரத்தில் படித்தால் மிகச் சிறப்பாகப் படிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டு காலை என்றால் காலையிலோ... மாலை என்றால் மாலையிலோ படியுங்கள்.

12. எந்தப் பாடத்தைப் படிக்கப் போகிறீர்களோ... அந்த பாடத்தை விருப்பத்தோடு பிரியுங்கள்... படியுங்கள். அதன் பலன், பல மடங்கு இருக்கும். உதாரணமாக, கணக்குப் பாடத்தில் 'கால்குலஸ்' சேப்டர் மண்டையை காய வைக்கும் என்ற எரிச்சலுடன் உட்காருவதைவிட, 'என்னால் ஈஸியாக இதைப் படிக்க முடியும்... என்னால் முடியாவிட்டால் வேறு யாரால் முடியும்..?' என்ற நம்பிக்கையோடு ஆரம்பித்துப் பாருங்கள். கால்குலஸும் இனிக்கும்!

13 உங்கள் மூளைக்கு அதிக திறன் இருக்கலாம். ஆனால், அதன் கவனம் ஒன்றின் மீது மட்டும் குவியும்போது பலன் அதிகமிருக்கும். எனவே, டி.வி. பார்த்துக் கொண்டோ, எஃப்.எம். கேட்டுக் கொண்டோ ஃபிசிக்ஸைப் படித்தால் ஃபிசிக்ஸும் மனதில் உட்காராது. பாட்டும் உட்காராது.

14 ஃப்ரெண்ட்ஸ், அம்மா, அப்பா என்று யாருடனாவது சண்டை போட்டிருந்தால், அந்தக் கவலையுடனேயே படிக்க உட்காராமல் சண்டை போட்டவர்களுடன் 'பழம்' விட்டுவிட்டு, மனக்குழப்பங்களுக்கு 'குட் பை' சொல்லிவிட்டுப் படிக்க உட்காருங்கள். இல்லையென்றால், நீங்கள் எத்தனை மணி நேரம் படித்தாலும் பாடம் மண்டையில் ஏறாது.

15. படிக்க உட்காரும் முன் பசியாக இருந்தால்... வயிறு நிரம்பச் சாப்பிடாமல், தேவையான அளவு சாப்பிடுங்கள். தண்ணீர் குடிக்க, பாத்ரூம் செல்ல என அடிக்கடி எழுந்து போகமல் இருக்க முன்கூட்டியே இவை அனைத்தையும் செய்து முடியுங்கள்.

16. படிக்கும் பாடத்தை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதைவிட, ஒருமுறை எழுதிப் பார்த்துவிட்டால் மனதில் ஆழமாகப் பதியும்.

17 படிக்கும்போது சிறு சிறு குறிப்புகளை நோட்ஸாக எடுத்துக் கொண்டால்... நிச்சயம் மறக்காது. உதாரணமாக, 'இந்திய நாடாளுமன்றம்' என்ற பாடப் பிரிவில் வரும் அத்தனை விஷயங்களையும் சிறு சிறு நோட்ஸாக எடுக்கும்போது, 'இந்தப் பிரிவில் 18 பாயின்ட்டுகள் வந்தன. 3-வது பாயின்ட் இது, 2-வது இது' என எதுவும் மறக்காது. ஒருவேளை மறந்தாலும் சீக்கிரம் நினைவுக்குக் கொண்டு வந்து விடலாம்.

18. எல்லாப் பாடங்களிலும் உங்களுக்கு முந்தைய வருட கேள்வித் தாளை வாங்கிப் படித்தால், எந்த டாபிக்குக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று புரியும்.

19. படிக்கும்போது முக்கியமான பாயின்ட்டுகளை கலர் பென்சில் அல்லது பேனாவால் கோடிட்டுக் கொண்டால் அது எப்போதும் மறக்கவே மறக்காது.

டென்ஷன் இல்லாமல் கிளம்பலாமே..!

20. சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் லீவு முடித்து, திங்கட்கிழமை காலையில் 'ஒரு ஷ¨வைக் காணோம், சாக்ஸைக் காணோம்...' என்று டென்ஷனாவதைவிட, ஞாயிற்றுக்கிழமை இரவே அடுத்த நாள் அணிந்து செல்லும் ஷ¨, சாக்ஸ், டை, யூனிஃபார்ம், லஞ்ச் பேக், டவல் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் எடுத்து வைத்துக் கொண்டால் நோ டென்ஷன்... நெவர் டென்ஷன்.

21. பள்ளி முடிந்து வந்ததும் காலி டிபன் பாக்ஸை பாத்திரம் கழுவப்போட வேண்டும். புத்தகப்பையை ஷெல்ஃப்பில்தான் வைக்க வேண்டும் என்ற ஒழுங்கு முறையை பழக்கப்படுத்திக் கொண்டால், 'அதைக் காணோம்... இதைக் காணோம்' என்கிற கூச்சல் காணாமல் போய்விடும்.

22. ஸ்கூல் டைம்டேபிளை எழுதி, வீட்டில் கண்ணில் படும் இடத்தில் ஒட்டி வைத்துவிட்டால்... அன்றன்று உள்ள பீரியடுகளுக்கு ஏற்றபடி நோட், புத்தகங்களை எடுத்துச் செல்லலாம். தினமும் அனைத்துப் புத்தகங்களையும் 'பொதி' சுமக்கத் தேவையில்லை.

23. "நேத்தும் ஸ்கூலுக்கும் நான் லேட்... இன்னிக்கும் லேட்டா போகணுமா... சீக்கிரமா டிபன் பாக்ஸை கொடுங்க" என்று அம்மாவை அதட்டுவதற்குப் பதில், காலையில் எப்போதும் சரியான நேரத்துக்கு எழுந்து விடுங்கள். தலை வாருவது, வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடிப்பது, லஞ்ச் பாக்ஸ், டவலை எடுத்து வைத்துக் கொள்வது போன்ற சின்ன சின்ன வேலைகளை நீங்களே செய்துகொண்டால், அம்மாக்களுக்கு இன்னும் நேரம் மிச்சமாகும். சரியான நேரத்தில் உங்களை கிளப்பிவிடுவார்கள்.

24. சாக்ஸ், ரிப்பன் போன்றவற்றின் ஜோடி காணாமல் போகாமல் இருக்க, துவைத்துக் காய்ந்ததும் ஜோடியாக முடிச்சுப் போட்டு வைத்துவிடுங்கள். கடைசி நேரத்தில் தேடும் டென்ஷன் இருக்காது.
25. வீட்டை விட்டுக் கிளம்புமுன் எடுத்துக்கொள்ள வேண்டிய பாடப் புத்தகங்கள், நோட், ஸ்போர்ட்ஸ் அயிட்டம், பென்சில், பேனா, எரேஸர், ஷார்ப்னர், ஸ்கேல், லஞ்ச் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் எல்லாம் இருக்கிறதா என்று ஒரு 'செக் லிஸ்ட்'டை மைண்டில் வைத்து செக் பண்ணுங்கள். எப்போதும் ஒரு ஸ்பேர் பேனா, பென்சில் செட் வைத்துக்கொள்வது டென்ஷனிலிருந்து விடுதலை கொடுக்கும்.

26. பள்ளி, கல்லூரிக்கு சைக்கிள் அல்லது டூ-வீலரில் செல்பவர்கள் டயரில் காற்று இருக்கிறதா, பஞ்சர் இல்லாமல் இருக்கிறதா என்பதை கடைசி நிமிடத்தில் பார்க்காமல் காலையிலேயே செக் பண்ணுவது உசிதம். வண்டி இப்போதைக்கு ரெடியாகாது என்று தெரிந்தால்... மாற்று வழிமுறை என்ன என்பதை உடனே முடிவு செய்யுங்கள். 'லேட்' என்ற டிஃபால்ட்டிலிருந்து தப்பிக்கலாம்.

கட்டாயம் வேண்டுமா டியூஷன்..?

காலை எழுந்ததும் மேத்ஸ் டியூஷன், ஈவினிங் சயின்ஸ் டியூஷன் என பள்ளிக்கு செல்வது போல் டியூஷன் செல்வதும் கட்டாயம் என்ற தோற்றம் உருவாகி உள்ளது. 'டியூஷன் அவசியமா?' என்று கேட்டால், 'இல்லவே இல்லை...' என்று சொல்லலாம், கீழே இருப்பவற்றைச் சரிவர பின்பற்றினால்...


27. பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தும்போதே முழு கவனத்துடன் பாடத்தைக் கவனித்து மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். வீடு திரும்பியதும் அன்றைய தினமே அதை ஒருமுறை திருப்பிப் பார்த்து, அதில் உள்ள மெயின் ஹெட்டிங், சைட் ஹெட்டிங் பாயின்ட்டுகளை மனதுக்குள் குறித்துக் கொண்டால் போதும்.

28. அடுத்த ஒரு வாரத்துக்குள் அந்தப் பாடத்தை முழுவதுமாகப் படித்து விட்டால், பரீட்சை நேரத்தில் ஜஸ்ட் ரிவிஷன் செய்தால் மட்டும் போதுமானதாக இருக்கும்.

29. தினமும் காலையில் குறைந்தபட்சம் 1-2 மணி நேரமும், மாலையில் அதே அளவு நேரமும் படித்து விட்டால், 'எதற்கு டியூஷன்?' என்ற கேள்வி உங்களுக்கே தோன்றும். அதன் பிறகு 'டியூஷன் போனால்தான் நாம் படிக்க முடியும்' என்ற மாயை உங்களுக்கு 'டாட்டா' காட்டும்.

30. நீங்கள் ஒரு சப்ஜெக்டில் 'வீக்'காக இருக்கும் பட்சத்தில்தான் டியூஷன் செல்கிறீர்கள். டியூஷனில் அந்தப் பாடத்தை தெளிவு படுத்துவார்கள். அதே பாடத்தை பலமுறை எழுதி காண்பிக்கச் சொல்வார்கள். அதேபோல, உங்களுக்குச் சந்தேகமிருக்கும் பாடத்தை உங்கள் ஆசிரியரிடமே கேட்டுத் தெளிவு பெறலாம். வீட்டிலிருக்கும் அக்கா, அண்ணன், அம்மா, அப்பா என்று யாருடைய உதவியையாவது நாடலாம். இவர்களால் உங்களுக்கு முழுமையாக உதவ முடியாது என்ற போது டியூஷன் பற்றி யோசிக்கலாம்.

அதிக பணம் கொடுத்து வாங்கும் கைடு, நோட்ஸ் அவசியமா..?

பாடப் புத்தகம் ஐந்து என்றால், அதற்காகப் பயன்படுத்தும் கைடு ஆறாக இருக்கும். அதிலும் இந்த கம்பெனி நோட்ஸ்தான் பெட்டர், அந்த கம்பெனி நோட்ஸ்தான் பெட்டர் என்று கம்பெனிக்கு ஒன்றாக வாங்குவது அவசியமே இல்லை. காரணங்கள்...

31. பாடப் புத்தகத்தில் இருக்கும் விஷயங்களைத்தான் அப்படியே நோட்ஸில் கொடுக்கிறார்கள். அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கான கைடில் பாடப் புத்தகங்களில் இருக்கும் கேள்வியைவிட நான்கைந்து கேள்விகளை அவர்களே உருவாக்கி பதில் தந்திருப்பார்கள். பாட புத்தகத்தில் இருக்கும் கேள்விகள்தான் பள்ளித் தேர்வுகளில் அதிகம் இடம் பெறும் என்பதை உணருங்கள்.

32. ஒன் வேர்டு ஆன்ஸருக்காகத்தான் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு 'கைடு' வாங்குகிறீர்கள். பாடத்தை ஒவ்வொரு லைனையும் பலமுறை வாசித்துவிட்டால்... எங்கிருந்து, எந்தக் கேள்வியைக் கேட்டாலும் ஈஸியாக பதில் சொல்ல முடியும்.

33. டீடெய்ல்டு கொஸ்டினுக்கான ஆன்ஸர்களை பாடப் புத்தகத்தில் இருப்பதைவிட வார்த்தை சுருக்கி, குறைத்து கைடில் எழுதியிருப்பார்கள். இரண்டு, மூன்று வரிகள் குறைத்துத் தருவார்கள் என்பதற்காக கைடு வாங்குவது அநாவசியம். அந்தக் கேள்விகளை புத்தகத்தில் படிக்கும் போதுதான் எல்லா பாயின்ட்டுகளையும் முழுமையாக எழுதி, அதிக மதிப்பெண்களை பெற முடியும்.

34. ஆங்கிலம் இரண்டாவது தாளில் இடம் பெறும் 'கிராமர்' ஆசிரியர் நடத்திய உடனே பலருக்கும் புரிந்து விடாது. அதனை பலமுறை டிரயல் அண்டு எர்ரர் என்ற வகையில் எழுதிப் பார்த்தால்தான், 'Direct to Indirect Sentences', 'இதுதான் Past Participle Tense' என்றெல்லாம் தெளிவுக்கு வரும். அதற்காக பல முறை பிராக்டீஸ் செய்வது அவசியம் என்பதால், 'வொர்க் புக்' வாங்கி பயன்படுத்தலாம். இதுவும்கூட பயிற்சிக்காக என்ற அடிப்படையிலேயே சிபாரிசு செய்யலாம்!

பலவீனத்தை பலமாக மாற்றும் டெக்னிக்!

35. சிலருக்கு கணக்கு என்றால் பிணக்கு; அறிவியல் என்றால் அலர்ஜி; வரலாறு என்றால் வயிற்று வலி என்று அந்தப் பாடங்களின் மீது வெறுப்பு வரும். காரணம் கேட்டால்... 'நான் அந்த சப்ஜெக்ட்டில் வீக்' என்று ஒற்றை வரி பதில் வரும். ஒரு சப்ஜெக்ட்டில் வீக்காக இருக்க முதல் காரணம்... அந்த சப்ஜெக்ட் என்றாலே அது கஷ்டமாகத்தான் இருக்கும் என்ற உங்களின் முன்கூட்டிய தீர்மானம்தான் (pre-assumption). அந்த மாதிரி எண்ணங்களைத் தவிர்த்தல் அவசியம்.

36. ஒரு ஆசிரியரை ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்காமல் போகும். அதனாலேயே அவர் நடத்துவதை கவனிக்காமல், முழு மனதோடு படிக்காமல், அவர் மேலுள்ள வெறுப்பை பாடத்தில் காட்டினாலும் அந்த சப்ஜெக்ட்டில் வீக் ஆவது நிச்சயம். மனவெறுப்பை மாற்றுவதுதான் வளர்ச்சிக்கு வழி!

37 ஒரு குறிப்பிட்ட சப்ஜெக்ட்டில் ஏன் 'வீக்'காக இருக்கிறோம் என்பற்கான காரணங்களை நீங்களே அலசி ஆராய்ந்து, பிரச்னையைத் தீர்க்க வழி தேட வேண்டும்.

38. இயற்பியலில் வரும் கணக்குகளும், ஃபார்முலாவும் பிடிக்கவில்லை; புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் , உடனே அதை வெறுப்பது தவறு. அந்தக் கணக்கை ஒன்றுக்கு இரண்டுமுறை உட்கார்ந்து போட்டுப் பார்த்தால் இயற்பியலில் நீங்கள்தான் கிங்!

39. வரலாறு பாடங்களில் வரும் சம்பவங்களையும் வருடங்களையும் நினைவில் வைத்துக் கொள்வது சிரமமாயிருக்கிறது என்றால்... அந்தப் பெயர்களையும் வருடங்களையும் கலர் ஸ்கெட்ச்சில் எழுதி அடிக்கடி கண்ணில் படும் இடத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். நீங்களே ஒரு வரலாறு ஆவீர்கள்!

40. புவியியல் பாடங்களில் வரும் இடம், நாடு, அமைப்பு போன்றவற்றை ஒருவர் இன்னொருவரிடம் மாற்றி மாற்றி விளையாட்டாகச் சொல்லிப் பார்க்கலாம். ஈஸியாக நினைவில் வைத்துக் கொள்ள உங்கள் தோழியின் பெயரை அதனுடன் தொடர்பு படுத்தி வைத்துக் கொண்டால்... ஈஸி... ரொம்ப ஈஸி!

41. கணக்குப் பாடத்தில் ஒரு சேப்டர் முடிந்ததும் அதில் வரும் ஃபார்முலாக்களை நோட்டின் கடைசி பக்கத்தில் எழுதி வைத்துக் கொண்டால், 'இந்த சேப்டரில் இத்தனை ஃபார்முலா' என்ற தெளிவு இருக்கும். சும்மா ரிலாக்ஸ்டாக இருக்கும்போது, அந்தப் பக்கத்தை அடிக்கடித் திருப்பிப் பாருங்கள். கணக்கு... வணக்கம் போடும் உங்களுக்கு.

42. இங்கிலீஷ், தமிழில் வரும் செய்யுளை மனப்பாடம் செய்து உடனே நோட்டில் எழுதிப் பார்த்து விடுங்கள்... அப்புறம் எந்த ரப்பர் வைத்து அழித்தாலும் அழியவே அழியாது!

43. இங்கிலீஷ் கிராமர் தகறாறு என்றால்... பன்னிரண்டு Tense- களையும் எழுதி, அதற்குக் கீழே உதாரணங்களையும் எழுதி வைத்து விடுங்கள். (எ.கா) Ramya is playing -Present continuous tense- மனத்தை விட்டு அகலாது, உதாரணமும், டென்ஸும்!

44. உயிரியல் பாடங்களில் வரும் படங்களை ஒருமுறைக்கு இரு முறை வரைந்து பாகங்களை குறித்து விடுங்கள். பரீட்சையில் அதற்கான பலன் கிடைக்கும்... நிறைய மதிப்பெண்களாக!

45. பொருளாதாரப் பாடங்களை ஒரு சினிமா கதைபோல் மனதுக்குள் ஓட்டுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயங்களோடு சம்பந்தப்படுத்துங்கள்.

46. அக்கவுன்ட்ஸ் கணக்கை நீங்களே ஒரு உதாரணத்தை உருவாக்கி மனதுக்குள் திரும்பத் திரும்ப எழுதிப் பாருங்கள். சி.ஏ. படிப்புக்கு உத்தரவாதம் ரெடி!

பொதுத்தேர்வுக்கு தயாராவது எப்படி..?

47. 'போர்டு எக்ஸாம்... பப்ளிக் எக்ஸாம்' என்றெல்லாம் பயங்காட்டும் பூச்சாண்டிகளுக்குப் பயப்படாதீர்கள். 'பயம் தோல்வியின் முதல் படி; நம்பிக்கை வெற்றியின் அடித்தளம்' - இதை மறக்கவே மறக்காதீர்கள்! அந்த நம்பிக்கையோடு பரீட்சையை அணுகுங்கள்.

48. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ரெடியாகுபவர்கள் வருடத்தின் முதலிலேயே தெளிவான தீர்மானத்துக்கு வந்து விடுங்கள். ஒன்பதாம் வகுப்பில் எந்தெந்தப் பாடத்தில் நீங்கள் வீக்காக இருந்ததாக உணர்ந்தீர்களோ, அந்தப் பாடங்களுக்கு ஆரம்பத்திலிருந்து அதிக 'அட்டென்ஷன்' கொடுங்கள்.

49. தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப் பாடங்களுக்கு அதிக அட்டென்ஷன் தேவையில்லை என்ற கருத்தை மாற்றுங்கள். அந்தப் பாடங்களில் மார்க் குறைந்தால், மொத்த மார்க்கில் இடிக்கும் என்பதை மறக்காதீர்கள்.

50. இங்கிலீஷ் கிராமரில் தகறாரா? 'ஆக்டிவ் வாய்ஸ், பேஸிவ் வாய்ஸ் தெரியலையே' என்று எக்ஸாம் ஹாலில் சென்று விழிப்பதைத் தவிர்க்க, அது சம்பந்தமான எக்ஸர்சைஸ்களை வீட்டில் பலமுறை பிராக்டீஸ் செய்யுங்கள். 'பிராக்டீஸ் மேக்ஸ் எ மேன் பெர்ஃபெக்ட்!' தமிழ் இலக்கணத்துக்கும் அவ்வாறே..!

51. பொதுத்தேர்வுகளைப் பொறுத்தவரை பெரும்பாலான பள்ளிகளில் டிசம்பர் மாதத்திலேயே பாடங்களை முடித்து விடுவார்கள். அடுத்த மூன்று மாதங்களில் ஃபர்ஸ்ட் ரிவிஷன், செகண்ட் ரிவிஷன், தேர்ட் ரிவிஷன் எக்ஸாம் என்று உங்களை தயார்படுத்துவதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். ரிவிஷன் எக்ஸாம் என்பது பாதி பப்ளிக் எக்ஸாம் மாதிரி என்று நினைத்து செயல்பட்டால் அதிக மார்க் கியாரண்டி!

52. இந்தந்த கேள்விகள்தான் வரும் என்று குறித்து வைத்து படிப்பதைவிட எல்லாவற்றையும் படித்தால்... எக்ஸாம் ஹாலில், 'ஐயோ, நான் படிச்ச எஸ்ஸே வரலியே' என்று அலற வேண்டிய அவசியமில்லை.

53. அறிவியல் பாடங்களில் அல்வா மாதிரி மார்க்கை அள்ள இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் சின்னச் சின்னக் கேள்விகளுக்கும் படங்களை வரைந்து பாகங்களை குறிக்க ஆரம்பத்திலேயே பழகிக் கொள்ள வேண்டும்.

54. டிசம்பர் மாதத்துக்குள்ளேயே பாடத்தில் இருக்கும் அனைத்து சந்தேகங்களையும் ஆசிரியரிடமோ, நண்பர்களிடமோ தீர்த்துக் கொள்ளுங்கள். சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளாமல் இருப்பது அந்தப் பாடத்தை பற்றிய அதிக குழப்பத்தைத் தரும்.

55. பல வருடக் கேள்வித்தாள்களை நண்பர்களிடமிருந்து கலெக்ட் செய்து, படியுங்கள். பாடத்தின் எந்தெந்த பகுதியிலிருந்து எந்தக் கேள்வி அதிகம் கேட்கப்படுகிறது என்ற தெளிவு வரும்.

56. கணக்குப் பாடத்தில் வரும் எல்லா ஃபார்முலாக்களையும் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லுமளவுக்கு மனப்பாடம் செய்வது அவசியம். பார்முலா தவறானால் மொத்தக் கணக்கும் தவறாகிவிடும் என்பதால் இதற்கு அதிக கவனம் வேண்டும்

57. முதல் ஆறுமாதங்களில் நடத்தப்படும் பாடங்களை ரிவிஷன் டெஸ்ட் நடத்தும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றில்லாமல், பாடம் நடத்திய 24 மணி நேரத்துக்குள் படித்துவிட்டால், மனதில் 'பச்சக்' என்று ஒட்டிக்கொள்ளும். வெற்றிக்கொடியை ஈஸியாக நாட்டலாம்.

58. வாழ்க்கையில் முக்கியமான பகுதி இந்த பப்ளிக் எக்ஸாம். இருந்தாலும், வாழ்க்கையே பரீட்சை கிடையாது. எனவே, அதைப்பற்றிய அவசியமான அக்கறை இருக்கட்டும். அநாவசிய பதற்றம் வேண்டாம்.

கல்லூரியில் சேரும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

59. கல்லூரி ஊருக்கு ஒதுக்குப்புறமாக, நடுக்காட்டில் அமைந்திருந்தால்... அதைத் தவிர்ப்பது நல்லது. நல்ல சாலை, பஸ் போக்குவரத்தும், எளிதில் போய் வரக்கூடிய தொலைவிலும் கல்லூரி அமைந்திருக்கிறதா என்பதை நேரில் சென்று பார்த்து உறுதி செய்யுங்கள்.

60. 'கல்லூரி' என்ற பெயரில் கூரை வேய்ந்த கூடாரத்தில் கோழிப்பண்ணைகள் போல நிறைய கல்லூரிகள் செயல்படுகின்றன. ஆகையால், நல்ல கட்டட வசதியுடன் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். போதிய காற்றோட்ட வசதி, நூலகம், ஆய்வகம் எல்லாம் இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

61. பெண்களும் ஆண்களும் இணைந்து படிக்கும் கல்லூரி எனில் கழிப்பறை வசதி பாதுப்பானதா, போதிய தண்ணீர் கிடைக்கிறதா என்பதை அவசியம் கண்காணியுங்கள்.

62. கல்லூரியில் பணியாற்றும் லெக்சரர்களுக்கு குறைந்தபட்ச அனுபவம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

63. சில தனியார் கல்லூரிகளில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க முடியாமல் லெக்சரர்கள் திடீரென ராஜினாமா செய்துவிட்டுப் போவதால் பல மாதங்களுக்கு லெக்சரர் இல்லாமலேயே பாடம் படிக்கிறார்கள் மாணவர்கள். எனவே, கவனம் அவசியம்.

64. கல்லூரியின் கல்வித் தரத்தை தெரிந்து கொள்ள, பல்கலைக்கழகத் தேர்வில் குறிப்பிடத்தக்க தேர்ச்சி விகிதத்தை அந்தக் கல்லூரி பெற்றிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

65. ஹாஸ்டல் எனில்... பெண்கள் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பு உள்ளதா, எத்தனை வார்டன்கள், இரவு நேர காப்பாளர்கள் எத்தனை பேர் உள்ளனர், அருகில் மருத்துவமனை உள்ளதா, சாப்பாடு தரமானதா, தண்ணீர், கழிப்பிட வசதி, ஹாஸ்டலுக்குள் இருக்கும் விதிமுறைகள் ஆகியவற்றை கட்டாயம் கேட்டுத் தெரிந்து கொண்டு பின் பிறகு சேருங்கள்.

66. கல்லூரியில் 'ராகிங்' கலாட்டா இருக்கிறதா, இதற்கு முன்பு ஏதேனும் கடுமையான சண்டைகள், பிரச்னைகள் நடந்துள்ளதா என்பதை அங்கு படிக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

67. கல்லூரியில் சேரும் முன்பே கல்விக் கட்டணம் மொத்தமாக எவ்வளவு வரும் என்பதை தெளிவாக விசாரியுங்கள். பிறகு, மாதம் மாதம் ஒரு ஃபீஸ் என்று தொல்லை தரமாட்டார்கள்தானே என்பதையும் உறுதி செய்யுங்கள்.

68. கல்லூரி வாகனங்களில்தான் செல்ல வேண்டும் என்றால், அந்த வாகனத்தின் கண்டிஷன், அனுபவமுள்ள டிரைவர்தான் ஓட்டுகிறாரா என்பதை நிச்சயம் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

69. பொறியியல் கல்லூரிகள் எனில், அங்கு தரமான நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் கேம்பஸ் இன்டர்வியூவுக்கான வாய்ப்புகள் உள்ளனவா... அவையும் திருப்திகரமானவையா என்பதை அறிந்துகொள்வது அவசியம்.

இந்திய அளவில் எழுதப்படும் தேர்வுகள்!

70. நம் நாட்டில் ஐ.ஐ.டி.(IIT) நிறுவனங்கள் மொத்தம் 15 உள்ளன. இவற்றில் சேர, JEE எனும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இதற்கான அப்ளிகேஷன், வங்கிகளில் கிடைக்கும். IIT வெப்சைட்டில் ஆன்லைன் மூலமாகவும் அப்ளை செய்யலாம். ஆண்டு தோறும் குறிப்பிட்ட மாதத்தில்தான் இதற்கான விண்ணப்பங்கள், தேர்வு உள்ளிட்ட நடைமுறைகள் ஆரம்பமாகும். தேதி மட்டும் மாற்றத்துக்குட்பட்டது.

பரீட்சை தேதி: ஏப்ரல் 2010, இரண்டாவது வாரம்.

விண்ணப்பங்கள் கிடைக்கும் நாட்கள்: நவம்பர் 2009, மூன்றாவது வாரத்திலிருந்து.

விண்ணப்பங்கள் வாங்க கடைசி நாள்: டிசம்பர் 2009, மூன்றாவது வாரம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: டிசம்பர் இறுதி வாரம் 2009.

ரிசல்ட் அறிவிக்கும் நாள்: மே கடைசி வாரம் 2010.

தேர்வு: மூன்று மணி நேரம் தேர்வு நடக்கும். அப்ஜெக்டிவ் டைப்பில் இரண்டு பாடங்களில் கேள்வித்தாள் இருக்கும். கேள்வித்தாளில் இடம் பெறும் பாடப்பிரிவுகள் இயற்பியல், வேதியியல், கணக்கு.

அதிக விவரங்களுக்கு www.jee.iitd.ac.in www.entrance_exam.net

71. டெல்லியிலிருக்கும் ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (AIIMS) நிறுவனம் ஆண்டுதோறும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்தி வருகிறது. ப்ளஸ் டூ தேர்வில் உயிரியல் பாடப்பிரிவில் 50% மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இந்த நுழைவுத்தேர்வை எழுதத் தகுதியுடையவர்கள். தேர்வுகளும், இந்த ஆண்டு அவை நடைபெறும் நாட்களும் கீழே இடம்பெறுகின்றன (ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நாட்கள் மாற்றத்துக்குரியது). மேலும் அதிக விவரங்களுக்கு: எக்ஸாமினேஷன் செக்ஷன், ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ், அன்சாரி நகர், புதுடெல்லி 110029.

தொலைபேசி: 011-26588580, 26588700.

72. ஐந்தாண்டு படிப்பான எம்.பி.பி.எஸ்ஸை இங்கே படிப்பவர்களுக்கு உலக அளவில் நல்ல மரியாதை உண்டு. இதில் இடம் கிடைப்பதென்பது ஏகபோராட்டம்தான். திறமையோடு முட்டி மோதினால் வெற்றி நிச்சயம். தகுதியான வேலை, தரமான சம்பளம் என்று வலம் வரலாம். தேர்வு நாள்: 01-06-2010. முடிவு அறிவிக்கப்படும் நாள்: 15-7-2010

73. மூன்று ஆண்டு படிப்பான பி.எஸ்சி. பாராமெடிக்கல் கோர்ஸில் லேப் டெக் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகள் சொல்லித்தரப்படுகின்றன. எம்.பி.பி.எஸ். போலவே எய்ம்ஸின் (AIIMS) இந்தப் படிப்புக்கும் உலகளாவிய மரியாதைதான். தேர்வு நாள்: 5-6-2010.

74. மூன்றாண்டு படிப்பான பி.எஸ்சி. நர்ஸிங்கை எய்ம்ஸில் (AIIMS) முடிப்பதே கௌரவமான விஷயமாக பலராலும் பார்க்கப்படுகிறது. இதற்கும் நல்ல வரவேற்பு உண்டு. தேர்வு நாள்: 13-6-2010. முடிவு அறிவிப்பு நாள்: 23-6-2010.

75. தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான 'காமன் லா அட்மிஷன் டெஸ்ட்' (CLAT), மே மாதம் நடைபெறுகிறது. 1,500 சீட், ஐந்தாண்டு படிப்பான பி.ஏ.எல்.எல்.பி-க்கு ஒதுக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் விநியோகிக்கப்படும். பெங்களூரு, ஹைதரபாத், போபால், கொல்கத்தா, ஜோத்பூர், ராய்ப்பூர், காந்திபூர், லக்னோ, பட்டியலா, பாட்னா, கொச்சியில் இந்த தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன.

எதிர்காலத்தில் அதிக வாய்ப்பிருக்கும் படிப்புகள்..!

இன்ஜினீயரிங் படித்தால் உடனே வேலை கிடைக்கும் என்பதால் வீட்டுக்கு ஒரு இன்ஜினீயரை உருவாக்கினார்கள். இன்று இன்ஜினீயரிங் படித்து விட்டு வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் மட்டுமே லட்சங்களில் நீள்கிறது. அதேபோல்தான் ஐ.டி. துறையும். இதையெல்லாம் பார்த்துக் குழம்பிப் போய் இருப்பவர்கள், 'எதைப் படித்தால் வேலை நிச்சயம்...?' என்ற கேள்வியோடு காத்திருப்பவர்கள்... இனி வரும் டிப்ஸ்களை கவனமாக படியுங்கள்.

76. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகப் பெரிய மாறுதல்களை காணப்போகிறது. அதனால் சமூகம், உறவு சார்ந்த பிரச்னைகள் அதிகம் தலைதூக்கும். அந்த பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லும் படிப்புகளை படித்தவர்கள்தான் அப்போதைய மில்லியனர்கள்.

77. உலகில் அரசியல், சமூகம், பொருளாதாரம் சுற்றுச்சூழல் ஆகிய 4 முக்கிய காரணிகளின் அடிநாதமே பிரச்னைக்கு உள்ளாகும். அந்தக் காலகட்டத்தில் 'சமூக அறிவியல்' தொடர்பான எம்.எஸ்.டபில்யூ. (MSW-Master of Social Work) படித்தவர்களின் எதிர்காலம் மிக பிரகாசமாகும்.

78. ஐ.டி. துறையில் ஏற்பட்ட தடுமாற்றம் போல் வரும் காலத்தில் பல துறைகளிலும் புயல் அடிக்கும். இதனால், மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுக்கப் போவது சமூக மனநலம், தனிநபர் மனநலம் சார்ந்த பிரச்னைகளே. அந்த சூழ்நிலையில் Sociology, Psychology, Anthropology, Social Work போன்ற படிப்புகள் பணம் தரும் கற்பகத் தரு!

79. எந்த நெருக்கடியும் ஏற்படாமல் இயல்பான சமூக வாழ்க்கை நீண்டாலும், பில்கேட்ஸ் துறையில் பணம் கொட்டினாலும் இன்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிக வேலை வாய்ப்பினை பெறுபவர்கள்... சமூக அறிவியல் துறை சார்ந்தவர்களே! காரணம் அனைத்து முன்னணி நிறுவனங்களில் Corporate Social responsibility என்ற ஒரு துறை பெரிய அளவில் இயங்கி வருவதே!

80. பணம் பெருகினாலும், வற்றினாலும் தனிமனித மகிழ்ச்சி, குடும்ப சந்தோஷத்தில் குழப்பம், உறவுகளில் பிரிவு என்று பிரச்னைகள் பிரமாண்டமாக உருவெடுக்கும். ஆகையால், குடும்ப நல ஆலோசகர்கள் - கவுன்சிலிங் கொடுப்பவர்களுக்கு திடமான எதிர்காலம் உள்ளது.

81. டெக்னாலஜியால் ஏற்படும் விளைவு காரணமாக சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு உண்டு.

82. சுற்றுலாத் துறையோடு தொடர்புடைய உணவகம், கைடு சர்வீஸ், போக்குவரத்து சேவை படிப்புகளுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உண்டு.

83. எப்போதும் வாய்ப்பிருக்கும் படிப்புகள்; கல்வி தொடர்புடைய மொழி பெயர்ப்பாளர், ஆசிரியர் மருத்துவத் துறையினர்களுக்கு வேலை வாய்ப்பு எளிதானதாக இருக்கும்.

திறந்த நிலை (Open Universities), தொலைதூரம் (Distance Education) ... தெளிவுக்கு சில துளிகள்

84. திறந்த நிலை பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் 2002-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் மொத்தம் 14 திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை அனைத்தும் டெல்லியிலுள்ள இந்திய தொலைதூரக் கல்வி கவுன்சிலால் ரெகுலேட் செய்யப்படுகின்றன.

85. இதன் நோக்கம் இந்திய மக்கள் அனைவருக்கும் உயர்கல்வி கொடுப்பதே.

86. திறந்த நிலை கல்வியில் இந்திரா காந்தி ஓபன் யுனிவர்சிட்டிக்கு பெரிய நிறுவனங்களில் மதிப்பு உண்டு.

87. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் 15 முதுநிலை பட்டப் படிப்பும் 17 இளநிலை பட்டப் படிப்பும், 5 டிப்ளமோ படிப்பும், 7 சர்டிஃபிகேட் கோர்ஸ்களும் அளிக்கப்படுகின்றன.

88. குறைந்தபட்சம் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள், பள்ளிக் கல்வியை இடையில் நிறுத்தியவர்கள், 18 வயது நிரம்பியிருந்தால் இங்கு விண்ணப்பித்து சேரலாம்.

89. திறந்த நிலை பல்கலைக்கழக பட்டத்தால் அரசு வேலை வாய்ப்பு பெற இயலாது.

90. சூழ்நிலை காரணமாக ரெகுலர் கல்லூரிக்கு செல்ல முடியாதவர்கள், பள்ளி இறுதிப் படிப்பை முடித்தவர்கள் தொலைதூரப் பல்கலைக்கழகத்தில் சேரலாம்.

91. தொலை தூர பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர், முதுநிலை பட்டப்படிப்புக்கு ரெகுலர் காலேஜில் சேரத் தகுதியுடையவர். இதுவே திறந்த நிலை கல்வியில் படித்தவர்களால் சேர முடியாது.

92. தொலை தூர கல்வியின் மூலம் பட்டம் பெற்றவர்கள், அடுத்து ஐ.ஏ.எஸ். தேர்வில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

93. தொலை தூர கல்வி பட்டப்படிப்பும், பட்டயப் படிப்பும் அரசு வேலையில் சேரத் தகுதியுடையவை.

94. ஒரே சமயத்தில் இரண்டு பட்டம் வாங்க வேண்டும் என்ற ஆசையில் ரெகுலர் காலேஜிலும், தொலை தூரக் கல்வி பல்கலைக்கழகத்திலும் படித்தால்... ஏதேனும் ஒரு பட்டம் மட்டுமே செல்லும்.

95. ஒரு பட்டத்தை தொலை தூரக் கல்வியிலும் இன்னொன்றை திறந்தநிலை பல்கலைக்கழகத்திலும் பெற்றிருந்தால் இரண்டுமே செல்லும். ஆனால், திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் பட்டம் வேலை வாய்ப்புக்கு உதவாது.

கல்வி... சில தகவல்கள்!

96. வேத காலத்தில் ஆணுக்கு இணையாக பெண்களும் படித்திருக்கிறார்கள். அதற்கு பிற்பட்ட இடைக்காலத்தில் பெண் கல்வி சுருங்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் மீண்டும் உயிர் பெற்றது.

97. 1971-ல் 22% பெண்களே கல்வி கற்றிருந்தனர். 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி 54.16% பெண்கள் கல்வி கற்றுள்ளனர்.

98. உயர் கல்விக்காக இந்தியாவில் தற்போது மொத்தம் அரசு அங்கீகரித்த 227 யுனிவர்சிட்டிகள் உள்ளன.

99. இந்திய அரசின் உயர் கல்வித் துறையின் தகவலின்படி இந்தியாவில் 16,885 கல்லூரிகளும், அதில் 99.54 லட்சம் மாணவர்களும் படிக்கிறார்கள். இத்தனை மாணவர்களுக்கு 4.57 லட்சம் பேராசிரியர்கள் கற்றுத் தருகிறார்கள்.

100. டெக்னாலஜியின் அபரிமிதமான வளர்ச்சியால் இன்று ஆன் லைனிலும் பல படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன. உலக மொழிகளைக் கற்றுத் தரும்படிப்புதான் முன்னணியில் உள்ளது.