Pages

Showing posts with label மனிதர்கள். Show all posts
Showing posts with label மனிதர்கள். Show all posts

Friday, October 29, 2010

உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர் : 1.20 கோடி பேருக்கு உணவு தந்ததற்கு கவுரவம்

ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 "ரியல் ஹீரோக்களில்' ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.

நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் உணவுக்கு போராடும் அவலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக "அக்ஷயா டிரஸ்ட்' என்ற அமைப்பையும் "ஸ்பான்சர்கள்' உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Source : dinamalar

Monday, October 11, 2010

அமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்

கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொன்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.
அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? : திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபாரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார்.
தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.
கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர்.
தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார். நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை தயார் செய்துள்ளார்.
சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.
”உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர். ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.
இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூம் பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால்மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது பெட்எக்ஸ், இபே , கோக்கோ கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.
100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இபே நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் இபே!
”உடனே மூன்று ப்ளூம் பாக்ஸ்களை அனுப்பி வையுங்க’ என்று மட்டும் யாரும் கேட்டுவிடாதீர்கள். காரணம், இது எதிர்காலத் தொழில்நுட்பம். இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Tuesday, September 21, 2010

அசாதாரண மனிதர்கள்

இன்றைய சராசரி சாதாரண மனிதர்களே, பிற்காலத்தில் அசாதாரண மனிதர்கள் ஆகின்றனர். பிறவியிலேயே யாரும் அசாதாரண மனிதர்கள் அல்லர். இதற்கு உதாரணமாக பலரைக் கூறலாம்.

ஜெர்மானியராகப் பிறந்தவர் விஞ்ஞானமேதை ஐன்ஸ்டீன். நாஜிகலால் நாடு கடத்தப்பட்டவர். அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தவர். அமெரிக்காவில் பிரின்ஸ்டன் நகரில் உள்ள ஆராய்ச்சி சாலை அவருக்காக ஒதுக்கப்பட்டது. முதல் முறையாக அந்த ஆராய்ச்சி சாலைக்கு அவரை அழைத்துச் சென்று சுற்றிக்காட்டி அவருக்கு திருப்த்திதானா? ஏதும் வசதிக் குறைவுகள் உள்ளனவா என்று அமெரிக்க விஞ்ஞானிகள் விசாரித்தனர்.

தயங்கித் தயங்கி மெதுவான குரலில் ஐன்ஸ்டீன் சொன்னார். “இங்கு எல்லாம் வசதியாகவே இருக்கிறது. ஒரே ஒரு குறை” என்று இழுத்தார். “என்ன என்று சொல்லுங்கள் உடனே சரி செய்யப்படும்” என்றனர். அமெரிக்க விஞ்ஞானிகள் அறை ஓரத்தில் இருந்த குப்பைக் கூடையைச் சுட்டிக்காட்டி, “இது ரொம்பவும் சிறியதாக இருக்கிறதே, கொஞ்சம் பெரிய குப்பைத்கூடை இருந்தால் நல்லது” என்றார். திகைத்துப் போய் “பெரிய குப்பைக்கூடையா? எதற்கு?” என்றார்கள்.

ஐன்ஸ்டீன் சொன்னார், “நான் என்ன மேதாவியா, எல்லா ஆராய்ச்சிகளையும் முதலிலேயே சரியாகச் செய்ய… தப்புத் தப்பாகச் செய்வேன். எழுதி எழுதிப் பார்த்தால் எல்லாம் தப்புத் தப்பாக இருக்கும். உடனே கிழித்து எறிந்து விட்டு மீண்டும் மீண்டும் எழுதுவேன். இந்த முட்டாளுக்கு ஒரு விஷயத்தை சரியாகச் செய்ய நிறைய சந்தர்ப்பம் வேண்டும். தவறுகளைப் புதைக்க கொஞ்சம் பெரிய குப்பைக் கூடையும் வேண்டும்” என்றார். அவரே அப்படி என்றால்… நாமெல்லாம் எப்படி?

சாதாரண மனிதர்களில் இருந்துதான் அசாதாரணர்கள் தோன்றுகிறார்கள். நாம் சாதாரணம் என்று சாதாரணமாகி விடவேண்டாம். நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள். சின்னச் சினனத் தோல்விகள். சின்னச் சின்னச் சறுக்கல்கள்… வீழ்ச்சிகள் ஒரு பெரிய விஷயமே அல்ல. எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காதீர்கள்.

Monday, September 20, 2010

இன்றைய பெண்

சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் இன்றைய பெண்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். இவர் கூறுவது பெண்களை இழிவுபடுத்துவதற்காகவோ அல்லது குறை கூறுவதற்காகவோ கிடையாது. பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே!!! எந்த ஒரு பெண்ணும், பெண்களை இழிவுபடுத்துகிறார்கள் அல்லது தாழ்வுபடுத்துகிறார்கள் என்று தவறாக கருத வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாரப் பத்திரிக்கை, மாதப் பத்திரிக்கை படிக்கிற பெண்கள் அதிகம். ஆனால் தினப்பத்திரிக்கை படிக்கிற பெண்கள் எத்தனை பேர்? நாட்டு நடப்பு பற்றி எத்தனை பெண்கள் அக்கறை காட்டுகிறார்கள்? மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம்.

தொலைக்காட்சிப் பெட்டியில் சினிமா பார்க்கும் போது குடும்பமே பார்க்கிறது. ஆனால் செய்திகள் தொடங்கியதும் பெண்கள் அடுப்படிக்குள் பாய்ந்து உணவை தயார் செய்வது ஏன்? செய்தி நேரம் வந்ததும் சினிமாவில் இடைவெளி மாதிரி அதை சாப்பாட்டுக்குப் பயன்படுத்த பல பெண்கள் விரும்புவது உண்மைதானே! இது சரிதானா? செய்தி நேரம் என்ன சினிமா இடைவெளியா? இப்படி இருந்தால் பெண்ணின் பொது அறிவு எப்படியிருக்கும்?

பெண்களின் அழகுணர்ச்சிக்கான விலை இன்று மிகமிக அதிகம். காலக் கொலையோ அதைவிட அதிகம். எப்படி? நகங்களை வண்ணப்படுத்தி, பழைய வண்ணங்களை நீக்கப் புது வண்ணம் பூச நெயில் பாலிஷ் ரிமூவர், உதடுகளை உயரிப்பேற்ற உதட்டுச் சாயம் (லிப்ஸ்டிக்), கன்னங்களில் கவர்ச்சி கூட்ட ரூஜ், கண்ணிமைகளை பெரிதுபடுத்தி அழகைக் கூட்ட மஸ்காரா, அழகாய்க் காட்ட ஐ லைனர், கழுத்தை, முகத்தைக் கழுவிக் காட்ட கிளன்சிங் மில்க், மாஸ்க் பிளீச், தோலின் இயற்கை மணத்தை வாசனையில் புதைக்க பாடி ஸ்ப்ரே மற்றும் சென்ட் வகைகள். கொண்டை தொடங்கி கெண்டைக்கால் வரை ‘மாட்சிங்’ பார்த்து அலங்கரிக்கத் தேவையான விதவிதமான உபகரணங்கள். பொருட்ச்செலவும், நேரச் செலவும் இவ்வளவு தேவையா? யோசியுங்கள். அறிவார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். அதற்காக மம்தா பானர்ஜியாகவும், மாயாவதியாகவும் மாறச் சொல்லவில்லை. கொஞ்சம் சிக்கனம்… தேவை இக்கனம்!!!

இந்த பெண்மையின் நிலை நமது இந்தியப் பெண்ளுக்கு மட்டுமல்ல. எல்லா நாடுகளிலும் இந்த வியாதி இருக்கிறது. உதாரணமாக, அமெரிக்காவில் பல விஞ்ஞானிகள் பங்கேற்ற விருந்து ஒன்றினுக்கு உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் போயிருந்தார். அவர் மனைவி அவருடன் போக வேண்டியவர். போக முடியவில்லை. கடைசி நேரத்தில் உடம்பு சரியில்லை.

விருந்து முடிந்து வீட்டுக்குத் திரும்பிய ஐன்ஸ்டீனிடம் அவர் மனைவி கேட்டார்…. விருந்து எப்படி நடந்தது? “நன்றாக இருந்தது?” என்று சுருக்கமாக கூறிவிட்டு அங்கு தாம் சந்தித்த விஞ்ஞானிகள் பற்றியும், அவர்களுடன் விவாதித்த அறிவு பூர்வமான விஷயங்கள் பற்றியும் ஆவலுடன் ஐன்ஸ்டீன் சொல்லத் தொடங்கினார். அவர் மனைவிக்குப் பிடிக்க வில்லை.

ஐன்ஸ்டீன் மனைவி சற்றே கோபமாக, “நான் இந்த அறுவையைக் கேட்க்கவில்லை. அங்கு விருந்துக்கு வந்திருந்த பெண்கள் எந்த மாதிரி கவுன் அணிந்திருந்தார்கள் கவனித்தீர்களா?” என்று சீறினார். ஐன்ஸ்டீன் பொறுமையாக, “இதோ பார்… விருந்து மேஜைக்கு மேலே பெண்களின் முகம் மட்டும் தான் தெரிந்தது. அதனால் அவர்கள் அணிந்து வந்த ஆடை எப்படிப்பட்ட ஆடை என்று எனக்குத் தெரியாது. உனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் நான் மேஜைக்கு கீழே குனிந்து பார்த்திருக்க வேண்டும். அது அவ்வளவு கவுரமாக இருந்திருக்காது” என்றார்.

பெண்கள் வாழ்விற்கு எது தேவை என்பதை முழுமையாக புரிந்து கொண்டால் அவர்களது வாழ்க்கை வளமானதாகவும் இனிமையானதாகவும் அமையும்!

Saturday, June 26, 2010

நான் கடவுள்

ஒரு மனிதன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்டிருந்தான். அது அவன் வாழ்க்கைப் பயணம்.

நீண்ட தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய கால் தடங்கள் அருகே இன்னொரு ஜோடி கால்தடங்கள். அவனுக்கு ஆச்சரியம். சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தெரியவில்லை.

சத்தமாகக் கேட்டான். "என்னுடன் வருவது யார்?"

"நான் கடவுள்" என்று அசரீரியாகப் பதில் வந்தது.

அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. 'கடவுள் என்னுடன் பயணம் செய்து வருகிறார்'.

பயணம் தொடர்ந்தது. அவன் அந்தக் கால் தடங்களைக் கவனிப்பதை நாளாவட்டத்தில் மறந்தான். சுகமாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் தலையெடுக்க ஆரம்பித்தன. சிறிய பிரச்சினைகள் பெரிதாயின. துன்பமும் துக்கமும் அதிகமாயின.

ஒரு கட்டத்தில் அவன் சமாளிக்க முடியாமல் தவித்த போது தான் அந்தக் கால் தடங்கள் நினைவு மறுபடி வந்தது. 'கூட கடவுள் இருக்கும் போதே இவ்வளவு துன்பமா' என்று தனக்குள் கேட்டுக் கொண்டவன் கால்தடங்களைக் கவனித்தான். அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பாதையில் ஒரே ஒரு ஜோடி கால் தடங்கள் மட்டுமே தெரிந்தன.

அவன் சற்றி பின்னோக்கிப் பார்த்தான். அவன் கஷ்டகாலம் ஆரம்பித்த கணத்திலிருந்து ஒரே ஒரு ஜோடிக் கால் தடம் மட்டுமே தெரிந்தது. அவனுக்கு அழுகையாய் வந்தது. கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடவுளை அழுகையினூடே கேட்டான். "கடவுளே என் இன்ப காலத்தில் உடன் வந்து கொண்டிருந்தீர்கள், துன்ப காலத்தில் என்னைக் கைவிட்டுக் காணாமல் போய் விட்டீர்களே இது நியாயமா?"

கடவுளிடமிருந்து பதில் வந்தது. "மகனே, நான் உன்னைக் கைவிடவில்லை. உன் துன்பகாலத்தில் நீ பார்த்த காலடிச்சுவடுகள் உன்னுடையவை அல்ல. என்னுடையவை. இந்தக் கடின யாத்திரையில் நடக்க முடியாத உன்னைத் தூக்கிக் கொண்டு நான் தான் நிறைய தூரம் வந்துள்ளேன். அதனால் தான் நீ உன்னுடைய காலடிசுவடுகளைக் காணமுடியவில்லை...."

அந்த மனிதன் கண்களில் நன்றியுடன் வழிந்த கண்ணீர் நிற்க நிறைய நேரம் ஆயிற்று.

குற்றம் காண்பதில் மனிதன் சமர்த்தன். அவனுக்கு அதற்கு நிறைய நேரம் தேவைப்படுவதில்லை. கஷ்ட காலங்களில் உறவும் நட்பும் காணாமல் போவது போல கடவுளின் அருளும் காணாமல் போவதாக அவன் என்ணுவதில் வியப்பில்லை. சுமைகள் கூடும் போது, இறக்கி வைக்க வழி தெரியாத போது இருக்கவே இருக்கிறார் கடவுள், அவனிடம் வசவுகள் வாங்கிக் கொள்ள.

வந்த கஷ்டங்கள் நமக்குத் தெரியும். எத்தனையோ கஷ்டங்கள் வரவிருந்து, அவை இறையருளால் வராமல் தவிர்க்கப்பட்டிருக்கலாம். அவை நம் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகிறது. கடவுள் கணக்கு சொல்வதில்லை. எனவே எத்தனையோ உண்மைகள் நமக்குத் தெரியாமலேயே போய் விடுகின்றன.

துன்பங்களும், சோதனைக் காலங்களும் வரும் போது நாம் ஒரு பெரிய உண்மையை மறந்து விடக்கூடாது. எதுவுமே காரணம் இல்லாமல் நம்மிடம் வருவதில்லை. அவற்றில் சில நாம் சம்பாதித்தவை. நம் முந்தைய செயல்களின் விளைவுகள். நாமே வரவழைத்தவற்றை நாம் சந்தித்தே ஆக வேண்டியுள்ளது. மறுப்பதும் எதிர்ப்பதும் நியாயமல்ல. மற்றவை நாம் வளர, பக்குவப்படத் தேவையான அனுபவங்கள். நாம் கற்க வேண்டிய பாடங்கள். அவற்றைக் கற்றறிந்த பின்னரே, அந்த சோதனைத் தீயில் பட்ட பின்னரே நாம் புடம் போட்ட தங்கமாய் மிளிரப் போகிறோம். அவை நம் வாழ்வில் வரா விட்டால் நாம் சோபிப்பதுமில்லை.

கையால் மென்மையாக தடவிக் கொடுத்தே கல்லை சிலையாக முடியாது. இன்பங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தால் நாம் பக்குவமடைவதும் சாத்தியமல்ல. உளிக்கு கல்லின் மீது பகையில்லை. உளியடிகளைத் தாங்காத கல் அழகிய சிலையாவதில்லை. கடவுள் என்ற சிற்பி நம்மைச் செதுக்கும் போது அழகிய சிலையாகப் போகிறோம் என்ற உணர்வுடன் தாங்கிக் கொண்டால், இது அர்த்தமில்லாததல்ல என்று புரிந்து கொண்டால் அந்த அடிகளும் நமக்கு ஆனந்தமே.

இன்னொரு விதமாகவும் சொல்லலாம். மருந்து கசக்கிறது என்று குழந்தை கதறியழுதால் தாய் விட்டு விட மாட்டாள். குழந்தை குணமாக வேண்டும் என்று அக்கறை அவளுக்கு அதிகமுண்டு. பலவந்தமாக மருந்தை குழந்தை வாயில் திணிக்கையில் குழந்தை தாயை ஒரு கொடுமைக்காரியாகக் கூட நினைக்கலாம். குழந்தை என்ன நினைக்கிறது என்பது தாயிற்கு முக்கியமல்ல. குழந்தை குணமாக வேண்டும் என்பதே தாயிற்கு முக்கியம். குழந்தைக்கு எது நல்லது என்பதை குழந்தையை விடத் தாய் நன்றாக அறிவாள். கடவுளும் அந்தத் தாயைப் போல் தான்.

இனி கஷ்ட காலங்கள் வரும் போது கடவுளை வையாதீர்கள். அவற்றைத் தாங்கும் சக்தியையும் அவற்றிலிருந்து கற்கும் புத்தியையும் மட்டுமே கடவுளிடம் வேண்டுங்கள்.

கஷ்டகாலங்களில் தைரியத்தையும் இழக்காதீர்கள். உங்களுக்கு நடக்க முடியாத போது சுமக்கத் தயாராய் கடவுள் உங்களுடனேயே இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் வாழ்க்கைப் பயணம் சுலபமாகும். முடிவு கண்டிப்பாக இனிமையாகும்.

--- எனக்கு பிடித்தவை

மனம் விட்டுப் பேசுங்கள்

தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்

உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு
மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று
போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக்
கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த
உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன.
என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து
கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக
வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே
மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு
திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து
வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும்
அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக்
கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும்
ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள்
வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும்
மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான்.
"அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான்.
"நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும்
உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான்
என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"

வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக்
கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன்
அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ
மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும்
போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப்
பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன்
தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை
என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து
வந்திருக்கிறான்.

வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.

இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம்
கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம்
கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால்
அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின்
நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி
வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து
கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம்.
அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே
தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல்
இருந்ததனால் அல்லவா?

எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம்.
சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை
தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது
உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.

புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத்
தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக
அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து
கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப்
புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும்
சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும்
காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும்
நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ,
மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி
அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம்
விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது
லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே
வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.

எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக
மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள்.
மனம் விட்டுப் பேசுங்கள்.

அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய
பொழுதாக அமையட்டும்!!..

Tuesday, December 29, 2009

கண்தானம்