Pages

Tuesday, March 27, 2012

தவிப்பு

பலநேரங்களில் வார்த்தைகள் மனங்களோடு
போராட முடியாமல் தோற்றுவிடுகின்றன!
அதனால் தான் பல உறவுகள் பல நேரங்களில்
பிரிய முடிவெடுத்தும் - பிரிய முடியாமல் தவிக்கின்றன!

Wednesday, March 21, 2012

எத்தனை முறை

எத்தனை முறை நான் உன்னை அடித்தாலும்
ஒவ்வொரு முறையும் என்னை உரசிவிட்டு
முத்தமிட்டு செல்கிறாயே என் மேல் அவ்வளவு அன்பா?
(இப்படிக்கு கிரிக்கெட் மட்டை பந்திடம்)

கற்று மற


களவையும் கற்று மறந்து விடலாம்,
காதலை கற்றேன் ஆனால் மறக்க முடியவில்லை!

காதல் கவிதை

காதல் கவிதை எழுத நினைத்தேன் என் செய்ய!
எனக்கு காதலும் வரவில்லை காதல் கவிதையும் வரவில்லை!

விற்பனை வரி

நான் பறிக்கும் போது மட்டும் அந்த
ரோஜாச்செடி விற்பனை வரி கேட்கிறது!

Wednesday, March 7, 2012

என் தங்கைகள்


என்னை முதன் முதலாக 
மரியாதையாக அழைக்க 
அவதரித்த மலர்கள்!
நான் பிள்ளையாக பிறந்து 
என் பெற்றோருக்கு மட்டுமே 
பெருமை சேர்த்தேன் - ஆனால்
நீங்களோ பிறக்கும் போதே 
பெற்றோருக்கு மட்டுமல்லாமல் 
எனக்கும் சேர்த்து அண்ணன் என்ற 
பெருமையை சேர்த்து எனக்கு 
தலை(முதல்) அங்கிகாரத்தை தந்தீர்கள்.


என் பெற்றோர் என நினைத்துகொண்டிருந்த 
என் சுயநல மனதிற்கு மரண அடி கொடுத்து
நம் பெற்றோர் என பொதுநல எண்ணத்திற்கு
வித்திட்ட பெருமை உங்களையே சாரும்.
தாயிடம் பசங்களை மட்டுமே பெற்றுக்கொண்டிருந்த நான்
உங்கள் இருவரிடம் தான் நேசங்களை கற்றுக்கொண்டேன்.


என் உடல் வளர தொடங்கி 
அறிவளரா சமயங்களில் 
நான் பழி சுமத்தும் கேடயமாய் 
நீ தோன்றினாய் எனக்கு - அப்போதெல்லாம் 
புரியவில்லை நான் உன்மீது சுமத்தியது பழிகள் மட்டுமல்ல 
நம் பாசப்பிணைப்பிற்கு கனமேற்றிய கணங்கள்(நேரங்கள்) என்று!


ஈரெட்டு வயதிற்கு முன்னால்வரை 
கல்லா மண்ணா,கண்ணாமூச்சி முதல் 
வச்சா வச்சா வாழைப்பழம் வழியாக 
டிக் டிக் யாரது திருடன் வரை விளையாட்டாக
கழிந்து போன காலங்கள் கழிதல் அல்ல
காலம் கடந்த வேளையில் நினைவலைகளாக 
நினைவுகொள்ள சேமித்து வைக்கப்பட்ட பொக்கிஷங்கள்!


விதியின் வலியோ அல்லது 
வலியாய் வந்த விதியோ - தெரியவில்லை 
நான் பொறியாளனாக படிக்க சேர்ந்த நேரம்
நம் குடும்ப வறுமையினால் உங்கள் இருவரின் 
கல்வி பாதைகளில் தடைக்கற்களை 
என்னையறியாமல் சிதறிவிட்டு சென்றேன்!


பிரதானமாக என் முதல் தங்கையின் 
கல்வியில் நான் வீசிய தடைகற்கள் 
கொஞ்சம் அதிகமாய் சிதறச் செய்துவிட்டேன்!
எத்தனையோ முறைகள் அந்த தடைக்கற்களை 
எடுக்க முயற்சித்திருக்கின்றேன் ஆனால் என் செய்ய 
உன் விஷயத்தில் மட்டும் நான் ஒரு கல் எடுக்க 
பல கற்கள் கூட்டணி வைத்துக்கொண்டு 
என்னை தோற்க்கடித்துக்கொண்டே இருந்தன.  


என்னை தோற்க்கடித்துக்கொண்டே இருந்த விதி - உனக்காக 
வேறொரு வடிவில் என்னை வெற்றி பெறசெய்ய ஆயத்தமானது,
கல்வியில் சறுக்கிக்கொண்டே போன உன் பயணத்தில், 
வாழ்வில் புது பரிணாமம் எடுக்கும் நேரம் கனிந்தது,
அதை உணர்ந்து என்னால் முடிந்தவரை சிறப்பாக 
நடத்தி முடித்தேன் உன் திருமணத்தை!
உன் கல்வியில் கோட்டை விட்ட நான் உன் 
வாழ்வின் முக்கிய நிகழ்வினை விடவில்லை!


நீ பலநேரங்களில் எடக்குமடக்காக செயல்படும் பொழுது,
என் கோபங்களையும் ஏன் சிலநேரங்களில் 
என் கோபங்கள் என் கைவழியாக பயணம் செய்து 
உன்னை லேசாக தாக்கியும் உள்ளது.-இதையெல்லாம் 
நினைத்து தானோ என்னவோ உன் கழுத்தில் 
மாங்கல்யம் மேல் நோக்கி பயணம் செய்யும் போது
என் கண்களில் கண்ணீர் கிழ்நோக்கி பயணம் செய்தது. 


நீ புகுந்தவீடு சென்ற பிறகுதான் புரிந்து கொண்டேன் 
உன் அருமைகளை, தியாகங்களை.இன்றும் இறைவன் 
உன் வாழ்வில் ஒரு சிறு கவலையை கானலாய் தூவியுள்ளான்.
குழந்தைகளை நேசிக்கும் குழந்தை போன்ற என் தங்கையே 
கவலை விடு உன் கருவறையில் கரு சேரும் நாள் வெகு தொலைவில் இல்லை!


முதல் தங்கையின் கல்வி தடைக்கற்களை 
அகற்ற தடுமாறிய நான் இளைய தங்கையின் 
தடைக்கற்களை தகர்த்தெறிந்து கல்வி கரையில் 
சில நாள் கல்லாமல் பலநாள் கற்க செய்துவிட்டேன்.


இரு தங்கைகளுடன் நான் பிறந்திருகாவிட்டால் 
பிறரை நேசிக்கும் நேசம் என்னிடம் வளராமல் போயிருக்கும்.
என் இன்னுயிரில் எனக்காக வாழ்ந்த, வாழும் 
என் தங்கைகளுக்காக என்றும் என் உயிர் வாழும்!