கடந்தாண்டை விட, இந்தாண்டு, மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுத்துள்ளதால், முக்கிய இன்ஜினியரிங் கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கான கட்-ஆப் மதிப்பெண் உயரும் வாய்ப்புள்ளது.
அதே சமயத்தில் தர அங்கீகாரம் பெற்றுள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் 60 இடங்களை உயர்த்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அது கிடைக்கும் பட்சத்தில், கடந்தாண்டு கட்-ஆப் மதிப்பெண்ணில் பெரிய மாற்றம் ஏற்பட்டு விடாது" என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்தார். இதனால் கட்-ஆப் உயருமா... உயராதா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
கணிதத்தில் 100 (200க்கு) மதிப்பெண்களும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தலா 50 (200க்கு) மதிப்பெண்களை கூட்டி இன்ஜினியரிங் கட்-ஆப் 200க்கு கணக்கிடப்படுகிறது.
தமிழகத்தில், 484 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இங்கு அண்ணா பல்கலை கவுன்சிலிங் வழியாக நிரப்புவதற்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்கள் உள்ளன.
விண்ணப்பிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் இடங்கள் கிடைக்கும் என்றாலும், விரும்பிய கல்லூரியில், விரும்பிய பாடத்தை பெறுவது, தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தான். இதற்கான கட்-ஆப் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவது சவால்களை ஏற்படுத்தியுள்ளது. கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் ஏராளமானோர் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாலும், சமமான கட்-ஆப் மதிப்பெண்களையும் பலர் பெற்றுள்ளதாலும் கடந்தாண்டுகளை விட, இந்தாண்டு இடங்களை பெற மாணவர்கள் கடும் போட்டியை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
தற்போதைய தேர்வு முடிவின்படி, கணிதத்தில் 2,697, இயற்பியலில் 647 மற்றும் வேதியியலில் 1,243 பேர் 200க்கு 200 மதிப்பெண் எடுத்துள்ளனர். கடந்தாண்டை விட இந்த எண்ணிக்கை மிக அதிகம். எனவே, கட்-ஆப் கணக்கிடப்படும் இந்த பாடங்களில் சதம் எடுத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்க இந்தாண்டு கடுமையான போட்டி தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது.
இதுகுறித்து ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது, "ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் திறன் அதிகரித்தே வருகிறது. அவர்கள் எடுக்கும் மதிப்பெண் அதிகரித்து வருகிறது. இது கட்-ஆப் மதிப்பெண்ணை உயர்த்தி விடுகிறது. பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஒருபுறம் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு இன்ஜினியரிங் கட்-ஆப் 1 - 2 மதிப்பெண் உயரும் வாய்ப்புள்ளது.
கடந்தாண்டு 195 கட்-ஆப் மதிப்பெண் எடுத்த மாணவருக்கு கிடைத்த இடம், இப்போது 196 கட்-ஆப் எடுத்திருந்தால் தான் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏ.ஐ.சி.டி.இ. விதிமுறையின்படி, தர மதிப்பீடு பெற்றுள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் 60 இடங்களை அதிகரித்து கொள்ளும் வாய்ப்புள்ளதால், மொத்தம் 9,000 இடம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்படியானால், முக்கிய கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான கடந்தாண்டு கட்-ஆப் மதிப்பெண்ணில் இம்முறை பெரியளவில் மாற்றம் இருக்காது" என்று கூறினார்.
கடந்தாண்டு கட்-ஆப் 195 மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை 5,651. இந்தாண்டு இந்த எண்ணிக்கையில் 1,879 உயர்ந்து, 7,530 பேர் இந்த மதிப்பெண்ணை எடுத்துள்ளனர். இந்தாண்டு 197க்கும் மேல் 4,294 பேர் எடுத்துள்ளனர். 197 மதிப்பெண் எடுத்த மாணவர்களே இம்முறை "டாப்" இன்ஜினியரிங் கல்லூரிகளில் தாங்கள் விரும்பிய பாடங்களை எடுக்கும் எளிய வாய்ப்பினை பெற்றுள்ளனர். கடந்தாண்டு கட்-ஆப் மதிப்பெண் 185க்கும் மேல் எடுத்தவர்களின் எண்ணிக்கை 21,086. இந்தாண்டு இந்த எண்ணிக்கை 24,128 ஆக உயர்ந்து விட்டது. இந்தாண்டு கணித பாடத்தில் 200க்கு 195 மதிப்பெண்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 13,383. கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 9,903 ஆக இருந்தது.
இந்தாண்டு இயற்பியல் பாடத்தில் 200க்கு 195 மதிப்பெண்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 9,128. கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 6,910 ஆக இருந்தது. இந்தாண்டு வேதியியல் பாடத்தில் 200க்கு 195 மதிப்பெண்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 10,414. கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 8,732 ஆக இருந்தது. தமிழ் வழி இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்கள், அரசு கல்லூரிகளில் இடம்பெற வாய்ப்புண்டு. கடந்தாண்டு தமிழ் வழி இன்ஜினியரிங் படிப்பில் 180 கட்-ஆப் மதிப்பெண்ணுக்குக் கூட, அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. தற்போது மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண் அடிப்படையில், தங்களுக்கு கிடைக்கக்கூடிய கல்லூரி மற்றும் படிப்புகளின் பட்டியலை, இப்போதே தயார் செய்து கொள்ளவது கவுன்சிலிங் சமயத்தில் உதவும்.
மருத்துவ கட்-ஆப் எப்படி?
உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியலில் சதம் எடுத்தவர்களும், அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. கீழ்கண்ட உத்தேச பட்டியல் அடிப்படையில் கட்-ஆப் பெற்றவர்களுக்கு மருத்துவப் படிப்பு பெறும் வாய்ப்புள்ளது. கடந்தாண்டை விட அதிகபட்சமாக 2 கட்-ஆப் மதிப்பெண் இம்முறை உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டில் கூடுதல் இடங்களுக்காக (250 இடங்கள்) சில மருத்துவக் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன. அந்த கல்லூரிகள் கூடுதல் இடங்கள் பெறும்பட்சத்தில் அதிகபட்ச கட்-ஆப் உயர்வு கொஞ்சம் தளர்ந்து 0.5 முதல் 1 வரை மட்டுமே கட்-ஆப் உயர்வு இருக்கும். இது பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் ஆறுதலான செய்தி.
-- நன்றி தினமலர்
0 comments:
Post a Comment