Pages

Friday, December 17, 2010

2-ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ.யை தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டிய பொறுப்பை சுப்ரீம் கோர்ட் தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளது..!

நீதியை பரிபாலனம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் உச்சநீதிமன்றம், இப்போது நீதி நிர்வாகத்தையே மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது நமது நாட்டைப் பிடித்த சோகம்தான்...!



"2-ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, சி.பி.ஐ.யும் அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். எந்த உயர் பதவியில் இருக்கும் தனி நபர் மற்றும் ஏஜென்சிகளின் நிர்பந்தங்களுக்கும் கட்டுப்படாமல், விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கடந்த 2001 முதல் 2008-ம் ஆண்டுவரை நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். அதாவது, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட தொலைத் தொடர்பு கொள்கை பற்றி விசாரிக்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு எந்த அளவுக்கு இழப்பு ஏற்பட்டது  என்பதற்கு, விசாரணையின்போது அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

இந்த விசாரணையின் நிலை அறிக்கையை, சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும், 2011, பிப்ரவரி 10-ம் தேதி, சீலிட்ட கவரில் வைத்து சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட் கண்காணிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்து விட்டதால், இந்த மோசடி பற்றி விசாரிக்க சிறப்புக் குழு எதையும் அமைக்க வேண்டிய தேவையில்லை.

ஏனெனில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் விரிவான விசாரணை மேற்கொள்வர் என, சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியமும், சி.பி.ஐ., சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் வேணுகோபாலும் உறுதி அளித்துள்ளதால், சிறப்புக் குழுவுக்கு அவசியம் இல்லை.

தகுதியில்லாத நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஆடிட்டர் ஜெனரல் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதில், உண்மையிருப்பதாக தெரிகிறது' எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

2-ஜி ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் அளித்த கடன் குறித்த விவரங்கள் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். இந்த ஊழலில் வங்கிகளுக்குப் பங்கு உள்ளதா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.

- உரிம ஒப்பந்தத்தில், எந்தெந்த தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

- உரிமம் பெற தகுதியற்ற நிறுவனங்கள் மீது டிராய் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கண்டறிய வேண்டும்.

- 2 ஜி உரிமம் வழங்கியதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று மனுதாரரான மூ்த்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களில் இந்த பெஞ்ச் திருப்தி அடைகிறது. குற்றம் நடந்ததற்கான பூர்வாங்கம் இருப்பதாகவும் உணர்கிறது.

- 2-ஜி ஏலம் தொடர்பான வழக்கு விசாரணையில் சிபிஐ பின் வாங்கியது, பதுங்கியது, தாமதம் செய்தது என்ற பூஷனின் குற்றச்சாட்டையும் இந்த கோர்ட் ஏற்கிறது.

- இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு விட வேண்டும் என்று கோரி மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்காமல் டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது, தவறாகும் என்று இந்த கோர்ட் கருதுகிறது.

- தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையரின் அறிக்கை மற்றும் பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஏலம் முற்றிலும முறைகேடாக நடந்திருப்பதையும் இந்த கோர்ட் உறுதிப்படுத்துகிறது.

- சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்தவுள்ள விசாரணையின்போது இந்த 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு நடைமுறையால் நாட்டுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது என்பதையும் தெளிவாக கண்டுபிடிக்க வேண்டும்.

- நீரா ராடியா பேசிய பேச்சுக்கள் அடங்கிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் அனைத்தையும் வருமான வரித்துறை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்.

இப்படி அடுக்கடுக்கான உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இதில் இருந்து தெரிவது என்னவென்றால் ஒரு வழக்கு விசாரணையை எந்தத் திசையில் நகர்த்துவது, நடத்துவது என்றுகூட செய்யத் தெரியாமல் தேங்கி நிற்கும் அரசுதான் இன்றைக்கு நம்மை ஆண்டு வருகிறது என்பதுதான்..!

உச்சநீதிமன்றத்தின் விளாசலைப் பொறுக்க மாட்டாமல்தான் லண்டனில் பதுங்கியிருந்த நீரா ராடியாவை அவசரமாக வரவழைத்து நேரில் விசாரித்தார்கள்.

நாடு முழுவதும் அதிரடி ரெய்டு நடத்தினார்கள். ராசா மற்றும் அவரது கொள்ளைக் கூட்டத்தினரை மிரட்டுவதாக நமக்கு பாவ்லா காட்டி சோதனை நடத்தினார்கள். இப்படி முதல்வர் வீட்டு ஆடிட்டர்வரையில் தங்களது கைவரிசையைக் காட்டி ஷோ காட்டியிருக்கிறது சி.பி.ஐ.

ஆனால் என்ன எடுத்தார்கள்..? எதைக் கண்டுபிடித்தார்கள் என்பதை அவர்கள் இனி சொன்னாலும் ஒன்றுதான்.. சொல்லாமல் விட்டாலும் ஒன்றுதான்..!

இத்தனை பெரிய நீதித்துறை கட்டமைப்பையே ஏமாற்றத் துணிந்த கொள்ளைக் கூட்டம், இவ்வளவு காலமா ஆதாரங்களை  விட்டு வைத்திருக்கப் போகிறார்கள்..?



சரி.. சுப்ரீம் கோர்ட்டின் நேரடி டைரக்ஷனில் சிபிஐ இயங்கக் கூடிய நிலைமைக்குப் போய்விட்டதே என்று நமது பிரதமர் என்று சொல்லப்படும் மன்னமோகனசிங் கொஞ்சமாவது கவலைப்படுவார் என்று நினைத்தீர்களா..? நிச்சயமாக இருக்காது..

மானம், அவமானம் பற்றியெல்லாம் இனிமேலும் அவர் யோசித்துக் கொண்டிருந்தால் பிரதமர் பதவியில் அவர் நீடித்திருக்க முடியாது..  அதிகாரத்தைப் பிடுங்கி வைத்துக் கொண்டு, நீ எதற்கும் லாயக்கில்லை. வீட்ல சும்மா இரு என்று நீதிமன்றமே சொல்கின்றவரையில்தான் இவரது வேலை பார்க்கும் லட்சணம் இருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவருக்கு நரசிம்மராவே பரவாயி்ல்லை போலிருக்கிறது..!


இவ்வளவுக்குப் பிறகும் இவர் பிரதமர் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது அரசியல்வியாதிகளுக்கு உரித்தான குணம்தான்..! இப்போதெல்லாம் கோர்ட், கேஸ், புகார்கள் இவையெல்லாம் தினம்தினம் அரசியல்வியாதிகள் சந்திக்கின்ற விஷயங்களாகப் போய்விட்டதால் இதெல்லாம் இவர்களுக்கு மரத்துப் போயிருக்கும்..

இவர்தான் இப்படியென்றால் நமது கல்லுளிமங்கன், தமிழினத் தலைவன், ஊழல் தாத்தா கலைஞர் கருணாநிதி மன்னமோகனசிங்கையும் மிஞ்சிவிட்டார்.

போயஸ் ஆத்தா விடும் அறிக்கைக்கு உடனுக்குடன் பதில் அளித்து நோஸ் கட் அளிக்கும் பணியைச் செவ்வனே செய்து வரும் இவரும், இவரது குடும்ப உறுப்பினர்களும் நீரா ராடியா டேப்புகள் பற்றி மட்டும் இன்றுவரையிலும் வாய் திறக்காதது ஏன்..?

ஜெயலலிதாவின் ஒவ்வொரு அறிக்கையையும் கண் கொத்திப் பாம்பாக பார்த்து வந்து முதல் நாள் அறிக்கையின் முதல் பத்தி, இரண்டாவது நாள் அறிக்கையின் இரண்டாம் பத்தியாக வந்திருக்கிறதே என்று கேட்கின்ற அளவுக்கு புத்திக் கூர்மையுள்ள இந்த மனிதர் தனது மகளும், மனைவியும் ஒரு அரசியல் புரோக்கருடன் தனது கட்சியை விலை பேசும் உண்மை வெளிவந்து இத்தனை நாட்களாகியும் கள்ள மெளனம் சாதித்து வருகிறாரே இது ஏனாம்..?

நேற்றைய ரெய்டுகளுக்குப் பிறகு இவரது துணைவியார் வாய் திறந்து ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். வோல்டாஸ் நிறுவனம் மற்றும் டாடா நிறுவனத்திற்குமான பிரச்சினையில் தனக்குச் சம்பந்தமில்லையென்று சொல்லியிருக்கிறார்.

வோல்டாஸ் நிறுவனம் அமைந்திருக்கும் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்தின் பவர் ஆஃப் அட்டர்னி தன்னுடைய ராயல் பர்னிச்சர் கடையில் பர்னிச்சர்களைத் துடைக்கும் வேலை செய்து கொண்டிருந்த சரவணன் என்பவருக்குக் கிடைத்தது. அவருக்குத்தான் இதில் தொடர்பு என்று கூறியிருக்கிறார்.

இப்படி கடையில் தூசி தட்டியவருக்கு இத்தனை கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்கும் அதிகாரத்தைக் கொடுப்பதற்கு டாடா நிறுவனத்தினர் என்ன முட்டாள்களா என்று நாம் திருப்பிக் கேட்கக் கூடாது.. ஏனெனில் இப்படி அறிக்கைவிட்டவர் தமிழினத்தின் தலைவரான கலைஞர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தியம்மாள். அவர் ஒன்று சொன்னால் ஒன்பது சொன்னதற்குச் சமம். கையது வாயது பொத்தி அமைதியாக இருங்கள் என்கிறார்கள்.

இவருடைய திருமகள் கனிமொழியும் நேற்றுதான் வாய் திறந்திருக்கிறார். இதுநாள்வரையிலும் தனது குடும்ப பிரச்சினைகளெல்லாம் வீதிதோறும், ஊர்தோறும், சேனல்கள்தோறும், பத்திரிகைகள்தோறும் நாறிய பின்பும் கண்டுகொள்ளாமல் பணம், அதிகாரம் இரண்டை மட்டுமே லட்சியமாகக் கொண்டு சிரிப்போடு வலம் வரும் இந்த அம்மணி தனக்கும், இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்று அறிக்கை விட்டிருக்கிறார்.

ஆனால் நீரா ராடியாவுடனான பேச்சுக்கள் பற்றி கலைஞர், அவருடைய துணைவியார், மகள், மகன்களான மத்திய அமைச்சர்கள், டேப் பேச்சில் படிபட்ட அமைச்சர்கள், அடிப்பொடிகளான உடன்பிறப்புக்கள் என்று அனைவரும் பதில் சொல்லாமல் இருப்பதில் இருந்தே அவைகள் அனைத்தும் உண்மை என்பது தெளிவாகிறது..!

நேற்று அமைச்சர் பூங்கோதையிடம் இது பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டதற்கும் அவர் பதில் சொல்லாமல் சென்றிருக்கிறார்.

நித்தியானந்தா ஜெயில் செல்லில் படுத்திருந்த விஷயத்தையே நான்கு தலைப்புகளில் வெளியிட்டு பிரத்யேகச் செய்தி என்று கொண்டாடிய நக்கீரன் தனது இணை ஆசிரியர் வீட்டில் நடந்த ரெய்டையும், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற கதையையும் சுத்தமாக மறைத்துவிட்டது. ஒரு சிறிய செய்திகூட அது பற்றி வெளியிடவில்லை.

இப்படியொரு இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகையாளராக நக்கீரன் கோபால் இத்தனையாண்டு காலத்திற்குப் பிறகு உருவெடுத்திருப்பதற்கு அவருக்கு நமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வோம்..!

ஆக மொத்தம், பொதுச் சொத்தைத் திருடிய கூட்டம் இன்றைக்கு தேள் கொட்டிய திருடனைப் போல் திருதிருவென முழிக்கிறது.

இந்தக் கள்ள நாடகத்தில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகர்கள் இவர்கள்தான் என்பதால் இந்த நடிப்பு இவர்களுக்குக் கை வந்த கலை. திரை விழுகும்வரையில் நடிப்பைக் கொட்டிவிட்டுத்தான் போவார்கள்..!

அடுத்த முறை இவர்களை நாடக மேடையில் ஏற விடாமல் தடுக்கும் பணியை மட்டும் நாம் செய்தால், அது நமக்கும் நல்லது.. நமது வாரிசுகளுக்கும் நல்லது..!

0 comments:

Post a Comment