Pages

Monday, December 6, 2010

எங்கும் எதிலும் ஒரே லஞ்சமயம்; சாலை சீரமைப்பு ஒப்பந்தம் பெறவும் லஞ்சம்; பணம் பெறவும் லஞ்சம்

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மாநிலம் முழுவதும் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் தரம் குறைவாக போடப்பட்ட சாலைகள், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சாலைகள் பாதிப்பால், பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் முக்கியப் பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலைகளை, மாநில நெடுஞ்சாலைத்துறை அமைத்து, பராமரித்து வருகிறது. இது தவிர, மாநகராட்சி நிர்வாகம் தங்களுக்கு உட்பட்ட சாலைகளையும், நகராட்சி நிர்வாகம் தங்களுக்கு உட்பட்ட சாலைகளையும், ஒன்றியம் மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட சாலைகளை நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகங்களும் அமைத்து, பராமரித்து வருகின்றன.இந்தப் பணிகள் டெண்டர் மூலம் ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்கள் மட்டுமின்றி, இதர ஒப்பந்ததாரர்களும் இந்த டெண்டரை எடுத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.பொதுவாக தார் சாலைகளை அமைக்கும் போது, பதினேழரை செ.மீ., தடிமன் கொண்டதாக இருக்க வேண்டும்; தரமான ஜல்லி மற்றும் தாரினை பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் ஒப்பந்ததாரர்களுக்கு விதிக்கப்படுகின்றன. மொத்த மதிப்பில், ஏழரை சதவீத தொகையை பிடித்தம் செய்து வைத்துக் கொண்டு, சாலைப் பணி முடித்த இரண்டு ஆண்டுகள் கழித்து, சாலையின் தரம் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்த பின்பே ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்குகின்றனர்.இது போல பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டாலும், இவை நடைமுறையில் அமலில் இல்லை. சாலைப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், பல்வேறு மட்டங்களிலும் கப்பம் கட்ட வேண்டியுள்ளதால், சாலைகள் தரமானதாக அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஒப்பந்ததாரர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:எந்த ஆட்சி அமைந்தாலும், உரிய கமிஷன் கொடுத்தால்தான், சாலைப் பணிகளை மேற்கொள்ள டெண்டர் எடுக்க முடியும்; வேலை செய்ய முடியும்; அதற்கான பணத்தை பெற முடியும் என்ற நிலை தொடர்ந்து வருகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு விகிதம் என கமிஷன் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் அமையும் சாலைப் பணிகளை மேற்கொண்டால், அமைச்சர் தரப்புக்கு ஏழு சதவீதமும், அந்த பணி நடக்கும் உள்ளூர் ஒன்றிய செயலருக்கு ஒரு சதவீதமும் கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளது.இது தவிர உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட சாலைப் பணிகளை மேற்கொள்வதானால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சியாக இருந்தால் மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கு கமிஷன் வழங்க வேண்டும்.இதன்பின், "டெண்டர் செட்டில்மென்ட்' என ஒரு சதவீதம் கொடுத்தால், சாலைப்பணி ஒதுக்கப்படும்.

பணி முடிந்தபின், அதற்கான பணத்தை பெறுவதற்கு என தனியாக, "கட்டிங்' கொடுக்க வேண்டும். இதற்கும் தனியாக பட்டியல் நடைமுறையில் உள்ளது.நெடுஞ்சாலைகளில் உதவிப் பொறியாளர்களுக்கு இரண்டு சதவீதம், உதவி கோட்ட பொறியாளர்கள், கோட்டப் பொறியாளருக்கு இரண்டு சதவீதமும் கமிஷன் வழங்க வேண்டும். ஐம்பது லட்சத்துக்கு மேல் மதிப்பீடு இருக்குமானால், தலைமைப் பொறியாளருக்கு ஒரு சதவீத கமிஷன் தனியாக வழங்க வேண்டியுள்ளது.இது தவிர, நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம், பேரூராட்சி இயக்குனர் அலுவலகம், உள்ளூர் உள்ளாட்சி அலுவலக அதிகாரிகள், நகராட்சி பொறியாளர்கள், மண்டல பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கப்பம் கட்ட வேண்டும்.

இந்த நடைமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே, பணி முடிந்து அதற்கான தொகையை பெற முடியும்.சாலைப் பணிகளை முடித்து இரண்டு ஆண்டுகள் ஆன பிறகுதான், வைப்புத் தொகையாக பிடிக்கப்படும் ஏழரை சதவீத தொகையை திரும்பத் தருகின்றனர். மாநிலம் முழுவதும் நடக்கும் சாலைப் பணிகள், இந்த அடிப்படையில்தான் நடந்து வருகின்றன. இவர்களுக்கு கமிஷன் கொடுத்து கட்டுப்படியாகாத நிலையில், பல ஒப்பந்ததாரர்கள் தொழிலை கைவிட்டுவிட்டு, வேறு தொழிலை பார்க்கப் போய் விட்டனர்.பழைய சாலைகளை கொத்தி விட்டு, சாலை போட வேண்டும். ஆனால், நாங்கள் அதன் மேல் சாலைகளை அமைத்து, புதுச்சாலை போட்டதாக கணக்கு காட்டி விடுகிறோம். இவை ஒரு மழைக்கே தாங்காது என்பது உண்மைதான்.இத்தனை பேருக்கு கமிஷன் கொடுத்து பணியை செய்தால், அரசு நிர்ணயிக்கும் தர நிர்ணயங்களை நாங்கள் எப்படி கடைபிடிக்க முடியும்? சாலை அமைப்பு பணிகளில் நடக்கும் இந்த கமிஷன் விகிதங்களை கட்டுப்படுத்தினால் மட்டும்தான், தரமான சாலைகள் அமையும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தமிழக அரசு 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மாநிலம் முழுவதும் சிறப்பு சாலைகள் அமைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்த சாலைகளாவது தரமானதாக அமைய, அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான், எந்த மழைக்கும் தாங்கக்கூடிய தரமான சாலைகள் அமையும்.

எங்கே போனது இன்ஜினியர்கள் திறமை?* அரசு ஆண்டு தோறும் சாலைகள் மேம்பாடு, சீரமைப்பு, புதிய சாலைகள் அமைத்தல், சிறுபாலங்கள் கட்டுமானம், பராமரிப்பு, ஆறுகள், ஏரிகள் தூர் வாருதல், மழைநீர் வடிகால் அமைப்பு, கால்வாய் சீரமைப்பு, சுரங்கப்பாதைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல், என பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு பணிகளை மேற்கொள்கிறது. மழை காலத்திற்கு முன் தூர் வாருகிறோம், சுத்தம் செய்கிறோம், என்ற பெயரில் பணம் செலவழித்து சுத்தம் செய்கின்றனர். ஆனால், சுத்தம் செய்து வெளியேற்றப்படும் கழிவுகளை அங்கேயே போட்டு விட்டுச் செல்வதால், மழை நீர் செல்லும் போது அவை மீண்டும் வடிகால் பகுதிக்குள்ளேயே சென்று விடுகின்றன. இதனால், செலவழித்த பணம் விரயமாகிறது.

* சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை, தகவல் தொழில் நுட்ப சாலை போன்ற சாலைகளை தனியாரே தங்கள் பணத்தைப் போட்டு உருவாக்குகின்றனர். அந்த சாலைகள் 15 ஆண்டுகள் வரை சேதம் ஏற்படாமல் தாக்குப் பிடிக்கின்றன. ஆனால், அரசு தரப்பில் போடப்படும் சாலைகள் மட்டும் ஒரு மழைக்கு கூட தாங்காமல் குண்டும், குழியுமாக ஆகிவிடுகின்றன. இங்கு சாலைகள் போடும் இதே கான்ட்ராக்டர்கள் சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளில் சாலை வசதிகளை கான்ட்ராக்ட் எடுத்து மிகவும் தரமாக, செய்து தருகின்றனர். ஆனால், நம்மூரில் சாலை போடுவது என்றால், "கட்டிங், கமிஷன்' கொடுத்த பின், "டுபாக்கூர்' சாலைகளை போட்டு விடுகின்றனர்.

*விண்ணில் ராக்கெட் செலுத்தும் அளவுக்கு தரமான பொறியாளர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் நம் நாட்டில் உள்ளனர். ஆனால், தண்ணீர் தேங்காமல் ஒரு சுரங்கப்பாதையைக் கட்டுவதற்கு கூட அவர்களால் முடியவில்லை. அதற்கு, அரசியல்வாதிகளுக்கு கொடுக்க வேண்டிய லஞ்சம் தான் தடையாக உள்ளது.

*முதல்வர், அமைச்சர்கள், வி.ஐ.பி.,க்கள் குடியிருக்கும் பகுதிகளில் மட்டும் தரமான சாலைகள், மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய், மேம்பாலங்கள் என அனைத்து வசதிகளும் உடனுக்குடன் நிறைவேறி விடுகின்றன. ஆனால், அப்பாவி மக்கள் குண்டும், குழியுமான சாலைகளில் அலுவலகம் செல்வதற்கு படாதபாடு படும் நிலை உள்ளது.

-- தினமலர் 

0 comments:

Post a Comment