தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விலை உயர்வை பார்த்து, ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏழைகளுக்கு எட்டாத உயரத்திற்கு தங்கத்தின் விலை சென்றதற்கு, ஆன்-லைன் வர்த்தகம் தான் காரணம் என்று, தங்க நகை வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வாழ்வில், தங்கம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அரசன் ஆனாலும், ஆண்டியானாலும் கடுகளவாவது தங்கம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது. இன்றைய காலகட்டங்களில் தங்கம் வெறும், "முதலீடு' என்பதுடன் நிற்காமல், சமூக அந்தஸ்து, சேமிப்பு, எப்போது வேண்டுமானாலும் விற்க முடியும் என்ற எண்ணம், காலத்தால் அழியாத்தன்மை மற்றும் தங்கம் மீது பெண்களுக்கான மோகம் ஆகியவையால் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
உலகில் தங்கத்தை அதிகமாக இருப்பு வைத்திருக்கும் நாடு அமெரிக்கா. அதிகளவில் தங்கம் வெட்டியெடுக்கப்படும் நாடு தென் ஆப்ரிக்கா. ஆனால், அதிகளவு ஆபரணத்திற்காகத் தங்கத்தைப் பயன்படுத்தும் நாடு இந்தியா. தற்போது, தங்கத்தின் விலை நாளுக்கு நாள் வரைமுறை இல்லாமல் அதிகரித்துச் செல்வது, பெண்களுக்கு தங்கத்தின் மீது கோபம் உள்ளதோ இல்லையோ, அதை வாங்கித் தராத கணவர்மார்கள் மீது தான் ஏகப்பட்ட கோபத்தில் உள்ளனர்.
தங்கம் தொடர் விலை உயர்வு குறித்து, சென்னையைச் சேர்ந்த தங்க நகை வியாபாரிகள் சிலர் கூறியதாவது: லண்டனில் தான் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் சந்தை உள்ளது. இச்சந்தை, தங்கச் சுரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து, உற்பத்தி அளவிற்கேற்ப, சந்தை விலையை நிர்ணயிக்கின்றனர். அங்கு நிர்ணயிக்கக் கூடிய விலைக்கு தகுந்தபடிதான், உலகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.
பொருளாதார மந்த நிலையில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலகச் சந்தையில் டாலர் மதிப்பு குறைந்ததால் மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும், அந்நாட்டு அரசங்கமும் தங்க முதலீட்டை உயர்த்தியதால் தங்கத்தின் விலை உயர்ந்தது.
தங்கத்தை வெட்டி எடுப்பதற்கான கொள்முதல் விலை, 2004ம் ஆண்டு ஒரு அவுன்ஸ்(31.110 மி.கி.,) தங்கத்திற்கு 400 டாலர் செலவானது. ஆனால், இன்று தங்கத்தின் இருப்பு அளவு குறைந்துள்ளதால் சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்கும் செலவும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இன்று தங்கம் விலை தினமும் உயர்வதற்கு, அப்போதைய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கொண்டுவந்த எம்.சி.எக்ஸ்., (மல்டி கமாடிட்டி எக்ஸ்சேன்ச்) எனப்படும் ஆன்-லைன் வர்த்தகமே காரணம் என, விவரம் அறிந்த வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். எம்.சி.எக்ஸ்., பட்டியலில், தங்கத்தை சேர்த்ததால், தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
இந்தியாவில் 90 சதவீதத்திற்கும் மேலாக தங்கத்தை வாங்குவோர், நடுத்தர வர்க்கத்தினர் தான். இந்த ஆன்-லைன் வர்த்தகத்தால் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட, இவர்களால் தங்கம் வாங்க முடியாத நிலை உள்ளது. கடந்த 2006ம் ஆண்டு 22 காரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 860 ரூபாய். இது, 2007ல் 875 ரூபாய், 2008ல் 1,100 ரூபாய், 2009ல் 1,300 ரூபாய், இன்று 1,800 ரூபாய் முதல் 1,900 ரூபாய் வரை வந்து விட்டது.
வங்கிகள் தங்கப் பத்திரங்களை வெளியிடுகின்றன. இது வாடிக்கையாளர்களைக் கவர்வதால் விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாகிறது. தங்க முதலீடு பாதுகாப்பான முதலீடு என்ற எண்ணம் அதிகளவில் மக்களிடம் பரவியுள்ளதும், தங்க விலை உயரக் காரணம். இன்று பெரும்பாலான மக்கள் ஆபரணத் தங்கமாக வாங்காமல், வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் விற்கப்படும் சுத்தமான 24 காரட்டில் உள்ள தங்க பிஸ்கட் மற்றும் நாணயங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இவ்வாறு தங்க நகை வியாபாரிகள் கூறினர்
0 comments:
Post a Comment