Pages

Thursday, March 24, 2011

ஒரே ஒருமுறை

அழகான ரம்மியமான மாலைப்பொழுது ,கதிரவனின் கதிர்கள் மேற்கு திசையில் மறைந்து , சந்திரனின் குளுமை பரவ தொடங்கும் நேரம் அது, மாலையின் முடிவிற்கும் இரவின் தொடக்கத்திற்கும் சில மணித்துளிகளே உள்ள அந்த இனிமையான நேரம் ,சென்னை மாநகரின் வெளிப்புறத்தே உள்ள
ஒரு அமைதியான பகுதியில் ஒரு பணக்கார வீட்டு அம்மா பெயர் இலட்சுமி தன் அழகிய மூன்று வயது குழந்தை ஸ்ருதியுடன் சந்தோசமாக கொஞ்சி கொஞ்சி விளையாடிக்கொண்டிருகிறாள்.

அம்முகுட்டி ,என் செல்லம் ,என் பட்டுல்ல இங்க வாம்மா என்று கொஞ்சியபடியே தன் குழந்தைக்கு ஏதோ உணவினை ஊட்டிக்கொண்டிருந்தாள்.ஹ்ம்ம் வேணாம் போ ,போ என்று தன் மழலை குரலில் சுருதி அடம்பிடித்தாள்.

இப்படியாக அம்மாவும் பிள்ளையும் ஒருவரை ஒருவர் கொஞ்சி கொஞ்சி விளையாடியதை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்.தன் மகளிடம் விளையாடியபடியே தன் வீட்டு வெளியே பார்த்தாள்,
அங்கு யாரோ ஒரு இளம் பெண் தங்களையே கவனித்துக்கொண்டிருப்பதை பார்த்தாள்.பிறகு தன் குழந்தையுடன் விளையாட்டினை தொடர்ந்தாள்.

ஒரு அரை மணிநேரம் கழித்து மீண்டும் பார்க்கும் போதும் அந்த பெண் அங்கேயே நின்றிருப்பதை கவனித்தாள்.ஹேய் ஹேய் போ போ இங்கெல்லாம் நிற்காதே போ போ என்று அந்த பெண்ணை மடியிலிருந்தபடியே விரட்டினாள் இலட்சுமி.இதை எதிர்பார்க்காத அந்த இளம் பெண் அங்கிருந்து நகர்ந்தாள்.அந்த இளம் பெண்ணிற்கு ஒரு 16 வயது இருக்கும் பார்க்க அழகாக ஆனால் ஏழ்மையாக இருந்தாள்.


அன்று இரவு முடிந்தது ,மறுநாள் மீண்டும் அதே அந்தி வேளையில் இலட்சுமியும் ஸ்ருதியும் விளையாடிக்கொண்டிருந்தர்கள் இப்போதும் அதே பெண் அதே இடத்தில் நின்று கொண்டு இருவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் .இதை கவனித்த இலட்சுமி சற்று கடினமான குரலில் ஹேய் ஹேய் யார் நீ என்ன வேணும் இப்போ போறியா இல்லயா என்றாள்.

பயந்து போன அந்த இளம்பெண் அங்கிருந்து நகர்ந்தாள்.அன்று இரவு படுப்பதற்கு முன் இலட்சுமி அவள் கணவன் ஆனந்திடம் பேசினாள்.

என்னங்க உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் ,டெய்லி ஒரு பொண்ணு நம்ம வீட்டுக்கு வெளியில இருந்து என்னையும் நம்ம குழந்தயையுமே பார்த்து கொண்டிருக்கிறாள்.இன்னைக்கு நான் அதட்டின உடனே அவ போய்ட்டா,எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க.

ஆமாம் இலட்சுமி கொஞ்சம் ஜாக்கரதையா இரு, இப்போ தான் போன மாசம் கோயம்பத்தூர்ல ஒரு சின்ன பொண்ணையும் அவ தம்பியையும் கடத்தி கொன்னுட்டாங்க பாவிங்க .யாருக்கு தெரியும் இந்த பொண்ண எதாவது கூட்டம் வேவு பார்க்க அனுப்பி இருக்கலாம்.

அய்யய்யோ ! இப்படியெல்லாம் கூட நடக்குமா ?எனக்கு இன்னும் பயமா இருக்கு.

பயப்படாத நாளைக்கு அந்த பொண்ணு வந்தா போலிசுக்கு போன் பண்ணிட்டு அந்த பொண்ண நகராத மாதிரி நம்மகொழந்தையோட எதாவது விளையாடு மற்றதை போலீஸ் பாத்துக்குவாங்க.

சரீங்க.

மறுநாள் அதே நேரம் இலட்சுமி தன் குழந்தையோட விளையாடிகொண்டே அந்த பெண்ணின் வருகைக்காக காத்திருந்தாள் .அந்த பெண்ணும் வந்தாள்,அவள் இவர்கள் இருவரையுமே பார்த்துக்கொண்டிருந்தாள் .உடனே இலட்சுமி அவளுக்கு தெரியாமல் போலீசுக்கு தகவல் தெரிவித்தாள்.

சற்று நேரத்தில் இரண்டு போலீஸ் அந்த பெண் அருகே வந்து , ஹேய் ஹேய் பொண்ணு யாரு நீ ? உனக்கு என்ன வேணும் ?

சார் சார் ஒன்னும் இல்ல சார் சும்மாதான் என்றாள் அமுதா(அந்த இளம் பெண்ணின் பெயர்) .

ஒன்னும் இல்லனா இங்க என்ன வேடிக்கை, என்ன எதாவது திருட வந்திருகிறாயா?
இப்படி கேட்டுக்கொண்டிருக்கும் போதே இலட்சுமி தன் குழந்தையுடன் கீழே இறங்கிவந்து அவர்கள் அருகே நின்றாள்.

சார் ஆமா சார் இந்த பொண்ணு மூணு நாளா இப்படித்தான் இங்க வந்து போகுது ரெண்டு நாளா நான் அதட்டியும் இன்னிக்கும் வந்திருக்குது அதான் உங்களுக்கு போன் பண்ணேன் .

ஹேய் சொல்லு யார் நீ யார் உன்ன இங்க அனுப்புனது என்று சற்று கோபமாக கேட்டார் ஏட்டு.

சார் அவங்க சொல்றது உண்மதான் மூணு நாளைக்கு முன்னால நான் கோவிலுக்கு போய்ட்டு இந்த பக்கமா வரும்போது இவங்களும் அவங்க குழந்தையும் விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்தேன். அந்த அழகில் அப்படியே என்னை மறந்து ரசித்தேன். ஆமாம் சார் நான் பொறந்த உடனே என் அம்மா என்ன பக்கத்துக்கு தெருவுல இருக்குற அனாதை ஆசிரம வாசல்ல யாருக்கும் தெரியாம போட்டுட்டு போய்ட்டாங்க ,அப்புறம் என்னை அந்த ஆசிரமத்துல தான் வளர்த்தாங்க.

எல்லா பிள்ளைகள் போல என்னையும் வளர்த்ததால என்னால் ஒரு தாயின் தாலாட்டை அனுபவிக்க முடியல எப்படியோ வளர்ந்துட்டேன் இப்போ நான் பன்னிரெண்டாவது வகுப்பு படிக்கிறேன் .இவங்க அவங்க கொழந்தையை கொஞ்சி கொஞ்சி விளையாடியதை பார்த்தவுடனே முகமே தெரியாத என் அம்மா ஞாபகம் வந்தது அதான் டெய்லி இங்க வந்தேன்.என்ன என்னை பார்க்க ஒரு ஏழை போல இருப்பதால் அவங்களுக்கு சந்தேகம் வந்திருக்கும் ,என்ன பண்றது சார் ஏழை என்றாலே பணக்காரர்களுக்கும் ,சட்டத்திற்கும் ஒரு மாதிரி தான் இருக்கிறது .இது ஏழைகளின் விதி.

ஹேய் இங்க பாரும்மா மன்னிச்சிடும்மா நான் உன்ன தப்பா நினைச்சு போலிசுக்கு போன் பண்ணிட்டேன் .மன்னிச்சிடும்மா -இது இலட்சுமி .

பரவால்லைங்க எனக்கு இது பழக்கம் ஆய்டுச்சு.

சார் நீங்க போகலாம் சார் உங்களுக்கு நன்றி சிரமத்திற்கு மன்னிக்கவும் என்று போலீசிடம் சொன்னாள் இலட்சுமி .

சாரி கொழந்த மன்னிச்சுடும்மா ,அப்போ நாங்க வரோம் மேடம் .

இலட்சுமி அந்த அமுதாவிடம் , அமுதா வாம்மா உள்ள போய் பேசலாம் என்றாள் .

இல்லைங்க நான் இன்னொருநாள் வரேன் இப்போ என்னக்கு நேரம் ஆச்சு ,
அப்புறம் அப்புறம் என்று அமுதா தயங்கினாள்.இதை கவனித்த இலட்சுமி
என்ன அமுதா அன்ன ஆச்சு ?

இல்லைங்க நான் ஒன்னு கேட்பேன் தப்பா நெனைக்க மாட்டீங்களே ?

என்னமா கேளு நான் தப்பா நெனைக்கமாட்டேன்.

இல்ல நான் உங்கள ஒரே ஒருமுறை கட்டிபிடிச்சு முத்தம் கொடுத்து அம்மா அப்படின்னு கூப்பிட ஆசை .

ஹேய் அமுதா அதுக்கு என்னமா தயக்கம் ,வாம்மா வா என்று கட்டி அணைத்தாள்.

அம்மா அம்மா என்று அமுதா இலட்சுமியை அணைத்து கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்தாள்.இலட்சுமியும் அமுதாவின் நெற்றியில் முத்தம் கொடுத்தாள் .அமுதா தன்னை அறியாமல் ஓவென்று அழ ஆரம்பித்தாள்.

இலட்சுமி அவளை அப்படியே தன் தோட்டத்திற்கு அழைத்து சென்று ஒரு மேசையின் மேல் அமர்ந்து தன் அருகே அமுதாவை உட்காரவைத்தாள்.குழந்தை ஸ்ருதியை அருகிலே வைத்துவிட்டு தன் மடியிலே அமுதாவினை படுக்கவைத்து அவள் தலை முடியினை கோதியபடியே அவள் தோளில் தட்டி அவளை சமாதானப்படுத்தினாள்.

அந்த தருணம் இருவருக்குமே ஒரு அழகான உணர்வாக இருந்தது.

அமுதா நீ ஏன் எங்களோடவே இருக்க கூடாது என்றாள் இலட்சுமி.

இல்லம்மா எங்க ஆசிரமத்துல நெறைய குழந்தைங்க இருக்காங்க இன்னைக்கு நீங்க எனக்கு கெடைச்சிடீங்க, ஆனா அவங்களுக்கு ?
என்னோடைய லட்சியம் என்னன்னா நான் நல்ல படிச்சி அந்த ஆசிரமத்துல இருக்கிற எல்லா குழந்தைகளுக்கும் அம்மா மாதிரி நடந்துக்கணும் .

நல்லது அமுதா என்றாள் இலட்சுமி .

அம்மா எனக்கு இன்னொரு விருப்பம் எனக்கு எப்போ உங்க நினைவு வந்தாலும் நான் வந்து உங்களையும் தங்கச்சியையும் பார்க்கணும்னு ஆசை அதுக்கு நீங்க அனுமதிக்கணும்

தாராளமா வா அமுதா, இது உன் வீடு என்றாள் இலட்சுமி .

கண்களில் கண்ணீரோடு விடை பெறுகிறாள் அமுதா ,நடப்பதை புரியாமல் தன் மழலை சிரிப்புடன் பார்க்கிறாள் ஸ்ருதி.

0 comments:

Post a Comment